தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் நேற்று (பிப்.22) மாலை சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் கலந்து கொண்டு நாட்டியக் கலைஞர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை ஆளுநர் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற ஆளுநர் நடராஜர், சிவகாமி அம்மன் ஆகிய சாமிகளை தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அதே வளாகத்தில் உள்ள கோவிந்த பெருமாள் சன்னிதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருதினர் மாளிகைக்கு சென்றார். இதனிடையே, முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மார்க்ஸியம் குறித்து அவதூறாக பேசும் ஆளநரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சிதம்பரம் கீழ வீதி, தெற்கு வீதி, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமையில் ரமேஷ் பாபு, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் தெற்கு வீதியில் கருப்பு கொடியுடன் திரண்டனர்.


பின்னர் அவர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்பி ராஜாராம் தலைமையிலான போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆளுநர் ரவி அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் இருந்து புறப்பட்டு சிதம்பரம் ஓமகுளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்துக்கு சென்று அங்கு சாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நந்தனார் கல்விக்கழக துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பின்னர் ஆளுநர் புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்றார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி ஆளுநர்க்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டது சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“