நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் வரும் 8 ஆம் தேதி மீண்டும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது. ஆனால், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியதையடுத்து, பிரச்சினை விஷ்வரூபம் எடுத்தது. இதன் தாக்கம், பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ஒலித்தது. திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் கோஷமிட்டு மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையில், நீட் மசோதா விஷயத்தில் ஆளுநர் கேட்டிருக்கும் விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளித்து மீண்டும் மசோதாவை அனுப்பிட நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, இன்று(பிப்ரவரி 7) காலை 3 நாள் பயணமாக டெல்லி செல்ல தமிழக ஆளுநர் திட்டமிட்டிருந்தார். அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீட் மசோதா தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆளுநர் டெல்லி செல்லும் காரணத்தால், சென்னை விமானநிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆளுநர் மாளிகை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நாளை (பிப்ரவரி -8) மீண்டும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil