மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே முரண்பாடு நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், அப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக விதிமுறைகள், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தரப்பு பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் குழு சார்பாக 2 பிரதிநிதிகள், நான்காவதாக பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஒரு பிரதிநிதி என நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.
ஆளுநரின் பிரதிநிதியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட 4 பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேடுதல் குழு தொடர்பாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டிருந்தது. துணைவேந்தர் தேடுதல் குழு குறித்த இந்த அரசாணையில் வேண்டுமென்றே யு.ஜி.சி தலைவரின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகும்.
எனவே, யு.ஜி.சி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யு.ஜி.சி பிரதிநிதியுடன் வேந்தர் நியமித்த தேடுதல் குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்." என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் தவிர்த்து மற்றவர்கள் மட்டும் இடம்பெற்ற குழுவை அரசாணையாக உயர்கல்வித்துறை வெளியிட்டது. அதுபோன்ற நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் கட்டாயம் தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என ஆளுநர் இந்த அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.