தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தற்போது அளித்துள்ளார்.
முன்னதாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு மட்டும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அவர்களின் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அதற்கு பின்னர் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட மாவட்டங்களில் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதேபோல், மற்றொரு மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிறைய நிலங்களில் கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களுக்கு வரி விதித்து அரசுக்கு வருவாயை உயர்த்தும் விதமாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
எனினும், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த இரண்டு மசோதாக்களுக்கு மட்டும் ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆளுநரின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.