ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் நேற்று (ஏப்ரல் 18) சென்றார். அங்கு சென்ற அவர் நேற்று தேவிபட்டினம் நவகிரக கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் தனியார் மண்டபத்தில் மாவட்ட மீனவ சங்கங்கள் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்பகுதி மீனவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.
தனியார் பள்ளி மாணவர்கள் ஆளுநரை வரவேற்றனர். மாணவர்கள் தங்களது தனித்திறமையை ஆளுநர் முன் வெளிப்படுத்தினர். சிலம்பம், யோகா, நடனம், பிரம்மிடு செய்து காட்டினர். அதில் குறிப்பாக உடல் பருமமாக இருந்த தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் ரோகித் என்ற மாணவன் செய்த யோகா, நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
மேலும் ஆளுநர் உரையை மொழி பெயர்ப்பு செய்வதற்கு அதே பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் விவேக பாரதி என்ற மாணவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆளுநர் உரையை அவர் அப்படியே ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்து மீனவர்களுக்கு புரியும் படி எளிமையாக விளக்கி கூறினார். இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அனுபவம் ஏதும் இன்றி ஆளுநர் உரையை அழகாக மக்களுக்கு புரியும்படி மொழி பெயர்த்த மாணவனின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மாணவனுக்கு ஆளுநர், அதிகாரிகள் உள்பட பலரும் வியந்து பாராட்டு தெரிவித்தனர். ராஜ்பவனுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“