விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூலை 13) நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியாவில் சிறந்த மனிதர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் காமராஜர். இளம் வயதில் தந்தையை பறிகொடுத்தும், 16 வயதில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று அரசியலில் நுழைந்தவர்.
அவர் ஆட்சி செய்த 1954 முதல் 1963 வரை, 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம். அப்போது மாணவர்கள் கல்வி கற்க பல கி.மீ. செல்ல வேண்டி இருந்தது. இதை குறைக்க தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அதனால் தான் இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 600 ஆண்டுகளுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீமந்த் சங்கர் தேவ், தன் 30 வயதில் ராமேஸ்வரம், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு வந்து தங்கி கல்வி பயின்றுள்ளார்.
இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி சென்னையில் உருவாகவும், தமிழகத்தில் அதிக தொழில் நிறுவனங்கள் இருப்பதற்கும் காமராஜர் மட்டுமே காரணம். பிரதமராக நேரு இருந்த சமயத்தில் அப்போதே நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் அதிக லாபம் ஈட்ட முக்கிய காரணமாக இருந்தவர். தமிழகத்தில், 13-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அணைகளை கட்டி விவசாயம், நீர்வளம் பெருக வழிவகை செய்தவர். இன்று நாம் பேசும் சமூக நீதியை, அன்றே நிலை நிறுத்தியவர்.
கள்ளச்சாராய மரணங்கள் போன்ற சம்பவங்கள் காமராஜர் ஆட்சியில் நடக்கவில்லை. கள்ளக் குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 66 பேர் பலியாகியுள்ளனர். இதே செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாரயம் குடித்து 24க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் 14 மாதங்களுக்கு பின் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
மக்களுக்கான நியாயம் உரிய காலத்தில் கிடைக்காமல் இருப்பது கண்டிக்கக்கூடியது. தமிழக முதல்வராக காமராஜர் இருந்த 9 ஆண்டுகள் பொற்காலம் என்றே கூறலாம். தமிழ்நாட்டில் சமூக நீதியை காப்பாற்றிய பெருமை காமராஜருக்கு உண்டு" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“