காரைக்குடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு அங்கிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி வரும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை இன்று பிற்பகல் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், புதுக்கோட்டைக்கு வருகை தரும் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியாவயல் முக்கத்தில் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கருப்புக்கொடி காட்டி, கருப்பு பலூன்களை பறக்கவிட முயன்றனர்.
இந்தப்போராட்டத்திற்கு தலைமை வகித்த, கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; “ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி அரசியல்வாதி போன்று செயல்படுகிறார். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை அவதூறாக பேசி வருகிறார்.
சித்தனவாசல் சுற்றுலாத் தலத்தை பார்வையிடுவதாகக் கூறி, கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஆளுநர் செல்லும் இடமெல்லால் கலவர பூமியாக மாறிக்கொண்டிருக்கின்றது. ஆகவே ஆளுநர் பழமை வாய்ந்த இந்த சுற்றுலா ஸ்தலத்திற்கு வரக்கூடாது, அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், ஆளுநருக்கு எதிராக, இண்டியா கூட்டணி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்துள்ளோம்" என்றார்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னதாக இன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
பல்வேறு துறைகளில் நேரடியாகவும் தொலைதூர கல்வி மூலமாகவும் பயின்ற மொத்தம் 40,414 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முனைவர் பட்டம் பெற்ற 164 பேர் தரவரிசையில் இடம் பெற்ற 184 பேர் என 348 பேருக்கு நேரடியாக பட்டம் வழங்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்திய தொழில்நுட்ப கழக இயக்குநர் வீ. காமகோடி ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இதற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் பல்வேறு வகையிலும் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ஆளுநர் தலைமையேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“