ராபர்ட் கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ புத்தகம் போலியானது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமூக சீர்திருத்தவாதியும் ஆண்மீகவாதியுமான அய்யா வைகுண்ட சுவாமிகளின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “ராபர்ட் கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிகளின் குடும்பம்’ என்ற புத்தகம் போலியானது” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கால்டுவெல் மற்றும் பலர் ஆங்கிலேயர்களால் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களை குறிவைத்து மதமாற்றம் செய்ய பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்கள் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை என்றும் கூறினார்.
“சுவிசேஷப் பிரச்சாரத்திற்கான சங்கம் (எஸ்.பி.ஜி - SPG) என்ற பெயரில் ஒரு அமைப்பை அவர்கள் வைத்திருந்தனர். மேலும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை இந்தியாவிற்கு அனுப்பி அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி அளித்து பணியமர்த்தத் தொடங்கினர். ராபர்ட் கால்டுவெல் மற்றும் ஜார்ஜ் உக்லோ போப் போன்றவர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “முறையான பள்ளிக்கல்வியை முடிக்கத் தவறிய ராபர்ட் கால்டுவெல், பள்ளிக்கூடத்தில் தேர்ச்சி பெறாமல், ‘திராவிட மொழிகளின் இலக்கணம்’ என்ற போலிப் புத்தகத்தை எழுதியுள்ளார். இங்கு நீண்ட நாட்களாக இயங்கி வந்த தாய்நாட்டுப் பள்ளிகளையெல்லாம் மூடத் தொடங்கினர்.” என்று கூறினார்.
“பள்ளிகளை நடத்த மிஷனரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தால் மட்டுமே சேர்க்கை பெறுவார்கள். அவர்கள் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களை குறிவைக்கத் தொடங்கினர். இதன் பின்னணியில், அவர்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களை குறிவைக்கத் தொடங்கினர்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார். .
மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சனாதன தர்மத்தை அழிக்க ஒட்டுமொத்தமாக முயற்சி நடப்பதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் தொடந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “1600-ம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகத்திற்காக இந்தியாவுக்கு வந்தபோது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் ஒன்று, அவர்களின் மதத்தை மாற்றி, அவர்களை நற்செய்திக்கு கொண்டு வருவதன் மூலம் இந்தியாவை சுவிசேஷம் செய்வதாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் பொறுப்பேற்றபோது, அவர்களின் காலனித்துவ சாம்ராஜ்யம் நிலைத்திருக்க, அவர்கள் சனாதன தர்மத்தை தந்திரமாக அழிக்கத் தொடங்கினர். அவர்கள் கொள்கைகள் மூலம் சமூகத்தின் நிறுவனங்களையும் குறிவைத்தனர். இது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1813-ம் ஆண்டு சாசனச் சட்டத்தில் நன்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய பிரிட்டிஷ் பிரதமராக இருந்த ஹென்றி டெம்பிள்டன், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தனது உரையில், இந்தியாவை சுவிசேஷம் செய்வது அவர்களின் கடமை மட்டுமல்ல, அவசியமும்கூட என்று அவர் கூறினார்.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடிப் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “இன்றும் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் மக்கள் உள்ளனர். ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தவர்களை பின்பற்றுபவர்கள், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி நமது சுதந்திர தினத்தை துக்க நாளாக அனுசரித்து கருப்பு தினமாகக் கடைபிடித்தவர்கள்.” என்று சாடினார்.
“அனைவரையும் உள்ளடக்கியது சனாதனம். மற்ற மதங்கள் அனைத்தும் பிளவுபடுவதால், உலகமே சனாதன தர்மத்தை எதிர்நோக்குகிறது” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிர்விணையாற்றி வருகின்றனர்.
ஆளுநர் ரவி அவர்கள், மகான் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வில், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடமிருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் வழங்கிய ஆழமான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி,… pic.twitter.com/SU81j1TQqq
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 4, 2024
இதனிடையே, அய்யா வைகுண்ட சுவாமிகளின் 192வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசியது குறித்து ஆளுநர் மாளிகை ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஆளுநர் ரவி அவர்கள், மகான் அய்யா வைகுண்டர் அவதார தினத்தின் 192வது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வில், சனாதன தர்மத்தை அதை அழிக்க சதி செய்தவர்களிடமிருந்து பாதுகாப்பதில் அய்யா வைகுண்டர் வழங்கிய ஆழமான பங்களிப்பை நினைவுகூர்ந்தார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்துக்கு புத்துயிரூட்டி, பெரிதும் வளப்படுத்தினார். சமூக பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி, விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதியை உறுதி செய்தார். அவர் கொண்டிருந்த பார்வை, அனைவருக்கும் சமமான நலத்திட்ட அணுகலையும் திட்டங்கள் அனைவருக்குமானது என ஒருவரைக் கூட விட்டு விடாமல் உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான அனைவரையும் உள்ளடக்கிய பாரதத்தில் உயிர்ப்புடன் விளங்கி ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உள்ளடக்கிய வளர்ச்சி மாடலில் பிரதிபலிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.