தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை என்று பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் உடன் நடந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உயர்கல்வித்துறை மீது அதிருப்தி தெரிவித்து குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி தலைமையில், பல்கலைக்கழக பிரதிநிதிகளின் ஒரு முக்கியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், ஆளுநர் நியமனம் செய்த சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு, ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உயர்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில், பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை.
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கின்றன. நேர்மையான முறையில் இந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பொறுப்பு நிலையிலேயே இந்த பணியிடங்கள் ஆண்டுக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இதனால், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கி இருக்கின்றன என்று ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"