முண்டாசுகவிஞர் மகாகவி பாரதியாரின் மூத்தமகள் தங்கம்மாவின் மகள் லலிதா பாரதி. 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை (டிச.26) காலை 9 மணியளவில் மரணித்தார்.
இவரின் பூதவுடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. லலிதா பாரதி இசை ஆசிரியை ஆவார். இவர், இசையை முறையாக கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக சேவையாற்றி பல மாணவர்களை உருவாக்கினார்.
மேலும், பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். கடந்த காலங்களில் மகாகவியின் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் வெளியிடுவதிலும் கவனம் செலுத்திவந்தார். கர்நாடக சங்கீத பாடகரான இவரது மகன் ராஜ்குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த நிலையில், லலிதா பாரதியின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை ட்விட்டரில், “மகாகவி பாரதியாரின் பேத்தி திருமதி. லலிதா பாரதி அவர்கள் , ஒரு சிறந்த பாடகி மற்றும் அர்ப்பணிப்புள்ள இசை ஆசிரியரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, தெலங்கானா ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ““மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று(26.12.2022) காலமானார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது.
தனது பாட்டனார் சுப்பிரமணிய பாரதியைப் போல இவரும் தமிழில் புலமை பெற்று பாரதியாரின் புகழுக்கு பெருமை சேர்த்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/