'பாஜகவுக்கு வாக்களியுங்கள்' என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை- ஆளுநர் அறிக்கை குறித்து கே.என்.நேரு விமர்சனம்

பொருளாதார வளர்ச்சி, கல்வி, பெண்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டி, ஆளுநரின் குற்றச்சாட்டுகளை நேரு மறுத்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி, கல்வி, பெண்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டி, ஆளுநரின் குற்றச்சாட்டுகளை நேரு மறுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp Image 2025-08-15 at 7.11.46 AM

Governor R.N. Ravi and K.N. Nehru

ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித்ஷாவே சிரிப்பார்” என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தமிகத்தில் இளைஞர்கள் மத்தியில் ரசாயனப் போதைப் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என கிண்டி கமலாலயத்தில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிக் கட்டும் என்ற பழமொழியைப் போல ‘தமிழ் மொழிக்கும் தமிழகத்துக்கும் ஆளுநர் எதுவும் செய்யவில்லை’ எனச் சொல்லி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்து அவமானத்தைச் சந்தித்த ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கழித்து நெறி கட்டியிருப்பதைத்தான் அவருடைய அறிக்கை வெளிக்காட்டுகிறது.

இன்னொரு பக்கம் சுதந்திர தினத்துக்காக தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்ததை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன. இப்படி விரக்தியில் வெம்பி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர். அதில் சொல்லப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே ஆதாரத்தோடு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. நாட்டின் சுதந்திர தினத்துக்கு விடுத்துள்ள செய்தியில் கூட நாகரிகம் இல்லாமல் ஆதாரமில்லாமல், மனம் போன போக்கில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.

Advertisment
Advertisements

மத்தியில் ஆளும் பாசிச பாஜக, தங்களுக்கு வேண்டாத மாநிலங்களுக்கு ஆளுநர் என்னும் நச்சுப் பாம்பை அனுப்பி குடைச்சல் கொடுத்து வருகிறது. அப்படி தமிழகத்துக்கு அனுப்பி வைத்த ஆர்.எஸ்.எஸ்-சின் கைக்கூலி ஆர்.என்.ரவி ஜனநாயக முறையில் மக்களின் பெருவாரியான ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். அத்தனை நெருக்கடிகளையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று நாம் நசுக்கினோம்.
அமைச்சர்கள் நியமனம், மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, ஆளுநர் உரையில் ஆரியத் திணிப்பு என எதிலாவது ஆளுநர் ரவி வெற்றி பெற்றிருக்கிறாரா? அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை.

இந்திய அளவில் பாசிச சக்திகளிடம் கட்டுண்டு கிடந்த ஜனநாயகத்தை மீட்டெடுத்தோம். பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறி ஆள் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மாறிவிட்ட ஆளுநர், சுதந்திர தின உரை என்ற பெயரில் அவதூறுகளை வீசி தன்னையே அழுக்காக்கிக் கொண்டார். ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார்.

மத்திய அரசு லட்சக்கணக்கான கோடிகளை தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்வு வழங்கியது எனச் சொல்லியிருக்கிறார். இந்த ஆண்டு மோடி அரசு சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையில் ’தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை என்பது கூட தெரியாமலா ஓர் ஆளுநர் இருப்பார்? இந்த போட்டோ ஷாப் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிந்தும் அறிக்கை வெளியிட்டுத் திருப்திப்பட்டுக் கொள்வது எல்லாம் ஆகச் சிறந்த நகைச்சுவை.

ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித்ஷாவே சிரிப்பார். தமிழகம் பற்றிய தேசிய புள்ளி விவரங்கள் கல்வியிலும், சமூக - பாலின வேறுபாடுகளைக் களையும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், ஆற்றல் மிக்க இளையோரை உருவாக்குவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் தலை சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகின்றது. அண்மையில் மத்திய அரசு புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட விவரங்களின் படியே பத்தாண்டுக்குப் பிறகு, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதமாக இரட்டை இலக்க வளர்ச்சிய எட்டியுள்ளது.

இந்நிலையில்தான் ஆளுநர் பொய்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்திருக்கிறார். ஆளுநரின் பேச்சுக்குப் பதில் கூறும் முகமாக ஆதாரங்களை முன்வைத்துப் பதிலளிப்பது, பயனற்றது. ஏனென்றால், ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகச் செயல்படாமல், திராவிட மாடல் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்கும் நாக்பூரின் ஏஜெண்டாகச் செயல்பட்டு வருகின்றார்.

”பல்லார் முனியப் பயனில சொல்லுவான்  எல்லாரும் எள்ளப் படும்” என்கிற வள்ளுவரின் குறளுக்கு உதாரணமாக விளங்குகின்றார். "பலர் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவன், எல்லாராலும் இகழப்படுவான்" என்பது தான் அந்த குறளின் பொருள். இதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர். அதனால் தமிழ்நாட்டு மக்கள் எவரும் ஆளுநருக்குரிய மதிப்பை அவருக்கு அளிப்பதில்லை.

நாட்டிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதும் தமிழ்நாடு தான். இந்தியாவிலேயே அதிகப் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கியதும் அதிக ஸ்டார்ட்-அப் எண்ணிக்கைகளும் உருவாக்கியது தமிழ்நாடு தான்.

கடந்தாண்டு புயல் வெள்ளப் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு 37,907 கோடி ரூபாய் கேட்டபோது வெறும் 276 கோடி ரூபாயை மட்டுமே வழங்கி வஞ்சித்தது மத்திய அரசு. பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியையும் இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்று மத்திய கல்வி அமைச்சர் அறிவித்தது ஜனநாயகப் படுகொலை இல்லையா?

குலக்கல்வியை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கும் மத்திய அரசின் கையாலாகாத கையாள் ரவிக்கு தமிழ்நாட்டுக் கல்வியின் தரம் பற்றி என்ன தெரியும்? தமிழ்நாட்டு அடையாளத்தை அழிக்கும் வகையில் கீழடி அகழ்வாராய்வு அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மத்திய அரசு.

ராஜ்பவனை ஆளுநர் ரவி அரசியல் பவனாக மாற்றி, கரை வேட்டிக் கட்டிய அரசியல்வாதி போலச் செயல்படுகிறார். கமலாலயத்திற்குப் போட்டியாக ராஜ்பவனை மாற்ற முயல்கிறார். ஆளுநர் அந்தந்த மாநில அரசுகளுக்கு நண்பராக இருக்க வேண்டியவர். ஆனால், எதிரிக்கட்சியாக நின்று, வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார்.

ரம்மி நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் நீட் பயிற்சி மையங்களுக்கும் பி.ஆர்.ஓ-வாகவும் செயல்படுகிறவரிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? உச்ச நீதிமன்றம் வரையில் போய் கரியைப் பூசிக் கொண்ட பிறகும் ஒருவர் திருந்தவில்லை” என அமைச்சர் கே.என்.நேரு ஆளுநரை விமர்சித்துள்ளார். 

செய்தி: க.சண்முகவடிவேல்  

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: