Advertisment

முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும்; சட்டசபையில் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி

சட்டப்பேரவைத் தொடக்க நிகழ்வில் தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் எனக் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
RN Ravi

சட்டசபையில் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சட்டப்பேரவைத் தொடக்க நிகழ்வில் தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் எனக் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின்  கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல்  கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையின் தொடக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தொடங்கினார்.   

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். தமிழ்நாடு மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தெரிவித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவையில் முதலில் தேசியகிதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறினார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை 2 நிமிடத்தில் நிறைவு செய்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை இதுவரை வாசித்திருக்கிறார்கள். மீதியை நான் வாசிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக, தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும் நாட்டின் மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை அளிக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தமிழ்நாடு அரசு அடைந்துள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது.

*ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது . மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

*பேரிடர் நிவாரணம், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகம். ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

*மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

*மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

*திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 24,926 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

*தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

*திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசாக திறம்பட செயல்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்டம்-2024 என்ற சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது. ஊரக, நகர்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வசதிகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் அமலாக உள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்தி செல்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான கொள்கை தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.” என்று பேசினார்.

தொடந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “தமிழ்த்தாய் பேரவை விதியின் படியே இசைக்கப்பட்டது. தமிழ்நாடு, மிகப் பெரிய புயல் வெள்ளம் ஏற்பட்டது, ஆனால், ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி அளிக்கவில்லை. பி.எம். கேர் நிதியில் கணக்கு கேட்க முடியாத அளவுக்கு நிதி இருக்கிறது. ஒரு 50 ஆயிரம் கோடி நிதி இருக்கிறது. அதில் இருந்து நிதியைக் கேட்டு வாங்கித் தரலாம்.  ஆளுநர் மாண்புப்படி நடந்துகொள்ள வேண்டும்; சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல” என்று  சபாநாயகர் அப்பாவு பேசினார்.

அப்போது, சபாநாயகர் அப்பாவு என்ன பேசுகிறார் என்று அலுவலரிடம் கேட்டு தெரிந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநரின் சொந்தக் கருத்துகல் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும், தயாரித்து அச்சிடப்பட்ட உரையில் உள்ளது மட்டும் அப்படியே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்று கூறினார். 

இதையடுத்து, சட்டப்பேரவையில் சபாநாயகர் மரபை மீறி பேசியதாகவும் ஆளுநர் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

ஆளுநர் ஆர்.என். ரவி இதே போல, கடந்த ஆண்டும் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் வெளியேறினார். இதன் மூலம், ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்காமல் 2வது முறையாக வெளியேறி உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment