பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Advertisment
முத்துராமலிங்க தேவர் விடுதலை போராட்ட வீரர் மற்றும் அரசியல் தலைவர் ஆவார். தமிழக அரசியலில் பெரும் பங்காற்றியவர். இன்று 115-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர். தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் பயணத்தை ரத்து செய்தார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்னில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil