அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதாவில் ஆவணங்கள் குறைவாக உள்ளதாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்காத ஆளுநரின் செயல்பாட்டை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் மசோதாக்கள், அரசு உத்தரவுகள் மீது ஆளுநர் முடிவு எடுக்க கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மசோதாக்களை நிறுத்தி வைக்கவோ, நிராகரிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.
இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். கே.சி. வீரமணி மீது வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளைத் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல, தமிழ்நாட்டில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதில் 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“