Advertisment

“தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வர வேண்டும்” - சிதம்பரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா ஆன்மீகம் மற்றும் கலாச்சார மையம் சார்பில் நடைபேற்ற அவருடைய 135-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக வர வேண்டும்” என்று பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Governor RN Ravi xyz

சிதம்பரத்தில் நடைபெற்ற 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் அடிகளார் அவர்களின் 135 -ஆவது பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசினார். picture Source: x/ @rajbhavan_tn

சிதம்பரத்தில்  சுவாமி சகஜானந்தா ஆன்மீகம் மற்றும் கலாச்சார மையம் சார்பில், அவருடைய 135-வது ஆண்டு  பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்த மண் சிவன் பிறந்த மண், இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறைவனால் இறைவழி கொண்டவர் சுவாமி சகஜானந்தா. சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில்  இரண்டு சக்திகளை எதிர்கொள்ள வேண்டும். ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி, காரல் மார்க்ஸ் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

Advertisment

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு காரல்மாக்ஸ் கூறியது 'இந்திய கலாச்சாரத்தை நாம் முழுமையாக சீர்குலைத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும்' என்று கூறினார் .அதனால் மதமாற்றம் இங்கு நடைபெற்றது. கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் மதத்திற்கு மாற்ற முனைந்தார்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம் அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது என்று அதையும் நாம் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.  பிரிட்டிஷ் அரசாங்கம் வந்த பிறகு பட்டியல் சமூகத்து மக்களை, எப்படி  ஆட்சி செய்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன் மூலம் சீர்குலைக்க தங்களது பணியை துவக்கினார்கள். அவர்கள்  தெளிவான பணிகளை முன்னெடுத்து துவக்கினார்கள். எத்தனை கல்விக்கூடங்கள் இருக்கிறது அதில் எந்தெந்த சமூகத்தினர் படிக்கிறார்கள் என்று கணக்கெடுத்தார்கள்.

Advertisment
Advertisement

மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் அரசாங்கம் வருவதற்கு முன்பு அழகான மரமாக இருந்தோம், நீங்கள் வந்த பிறகுதான் கிளைகளை  அழித்து விட்டீர்கள் என்று கூறினார் . நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் தலித் சமூகத்தினர் கொல்லப்பட்ட கிராமத்திற்கு சென்றிருந்தோம், அங்கே ஒருவருக்குக்கூட சரியான வீடு இல்லை. அதனால், பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறோம் .இங்குள்ள மக்கள் அடித்தட்டு மக்கள் வறுமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கிராம அளவில் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு  நந்தனார் கல்வி கழகத்தை தொடங்கிய இந்த சமூகத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்வி மூலம் சமுதாயத்தை சீரமைக்க முன்னெடுத்தார்கள் சுவாமி சகஜானந்தா. சுதந்திரத்திற்கு பிறகு மூன்றாவது ஒரு தூய சக்தி வந்தது அது எங்கள் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறியது. பட்டியல் சமூகத்து ஊராட்சி தலைவருக்கு நாற்காலி கொடுப்பதில்லை, காலணி அணிந்து கொண்டு கிராமத்தில் செல்லமுடியாத சூழ்நிலை தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சுவாமி சகஜானந்தா கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்ததை செயல்படுத்தி இருக்கிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும். பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதலமைச்சர் வரவேண்டும். சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி, சகஜானந்தா தோற்றுவித்த நந்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், விடுதி மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்.  இதையடுத்து, அங்கே வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட்டார். முன்னதாக, அவர் சிதம்பரம் ஓம குளம் பகுதியில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள சகஜானந்தா ஜீவசமாதி வழிபாடு செய்து அவரது  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நந்தனார் கல்விக்கழகம் உறுப்பினரும் சகஜானந்தாவின் பேரனுமான ஜெயச்சந்திரன் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். 

Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment