தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சனாதனம் குறித்தும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குறித்தும் பேசியது மாநிலத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளால் சர்ச்சையாக்கப்பட்டு வந்த நிலையில், பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக மாற்றி ஆங்கிலேயர்கள் சதி செய்ததாக பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக திமுக அரசு விமர்சனம் செய்ததையடுத்து, தமிழக அரசுக்கும் - ஆளுநருக்குமான உரசல் வெளிப்பட்டது.
அண்மையில், சென்னையில் ராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு மிகப் பெரிய சக்தியை வழங்கினாலும், மிகப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டை நீண்டகாலமாக ஆங்கிலேயர்கள் ஆண்டதால் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், கலாசாரரீதியாகவும் ஏராளமானவற்றை நாம் இழந்தோம். இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு தர்மத்தின் விதிகளில் இருந்து மனிதர்களின் வாழ்க்கை திசைதிருப்பப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் வெளியில் சொல்லப்பட்ட மதச்சார்பின்மைக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது.
சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இவை இரண்டும் வேறு வேறானவை. ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அனைத்து கடவுள்கள் மற்றும் மதங்களுக்கு நமது நாட்டில் இடம் உள்ளது. இங்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட சனாதன தர்மத்தைப் பின்பற்றியுள்ளனர்” என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன தர்மத்தை புகழ்ந்து பேசியது ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இதற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “இந்த மண்ணில் சனாதனத்துக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. அதை எந்த கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது.” என்று கூறினார்.
முன்னதாக, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பற்றி பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி ஆபத்தான அமைப்பு என்று கடுமையாக விமர்சித்ததும் சர்ச்சையானது.
இந்த நிலையில், வேலூரில் நடைபெற்ற வேலூர் சிப்பாய்ப் புரட்சி 216 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர். ஆர்.என். ரவி, “ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள். இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப் படுத்த ஆங்கிலேயர்கள் திராவிடத்தை இன அடையாளமாக மாற்றியதாக” கூறியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சிப்பாய்ப் புரட்சி ஆண்டு நடைபெற்று 216 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வேலூரில் இன்று வேலூர் சிப்பாய்ப் புரட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. வேலூர் சிப்பாய்ப் புரட்சி தினத்தை முன்னிட்டு வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இதைத் தொடர்ந்து கோட்டை மைதானத்துக்கு வந்த ஆர்.என்.ரவி, ஐ.என்.ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்.சி.சி மாணவர்கள், என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஆர்.என். ரவி, “தமிழ் மக்கள் போல தமிழில் பேச வேண்டும் என்பது தான் எனது விருப்பம். சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றனர். நேதாஜி ஐ.என்.ஏ படைக்கு சிப்பாய்கள் வேண்டும் என்ற போது, முதலில் ஆதரவு கொடுத்தவர்கள் வேலூர் வீரர்கள். மதம், பொருளாதாரம் மற்றும் இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்வதற்கு முன்னர், பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள். மக்கள் அப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்று வந்தார்கள்.
வட இந்தியாவில் இருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை. இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கியிருந்தோம். ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். வரலாற்றை இன்னும் உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள்” என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்தும், அவர் அங்கே பேசியது குறித்தும் ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “வேலூர் கோட்டையில் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஐஎன்ஏ படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் பாரதத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்த, புவியியல் வெளிப்பாடான திராவிடத்தை இன அடையாளமாக மாற்றிய ஆங்கிலேயர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.