“அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்; ஆனால் கலாச்சார நிகழ்ச்சிகள் மக்களை ஒன்றிணைக்கின்றன” என்று ஆளுநர் ஆர்.என். ரவி திங்கள்கிழமை பேசினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க-வுக்கும் ஏழாம் பொருத்தமாக தொடர்ந்து, உரசல்களும் முரண்களும் நடந்து வருகின்றன. ஆளுநர் பங்கேற்கும் நிகழ்சிகளில் திராவிடத்தை அவ்வப்பொது விமர்சித்து வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஹரியானா, சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, லட்சத்தீவு, டெல்லி, சண்டிகர், உத்தராகண்டம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழா திங்கள்கிழமை (நவம்பர் 4) கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்; ஆனால் கலாச்சார நிகழ்ச்சிகள் மக்களை ஒன்றிணைக்கின்றன” என்று பேசியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் மக்கள் வசித்தாலும்கூட மாநில உருவான தின கொண்டாடப்படும் பொழுது அனைவரும் ஒற்றுமையாக இந்த தினத்தை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு மாநிலங்கள் உருவான தினத்தை அந்தந்த மாநிலங்களே அரசின் சார்பாக சில கலாச்சார நிகழ்வுகளை நடத்தி மாநில தினத்தை கொண்டாடி வந்தனர்.” என்று கூறினார்.
மேலும், “பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உருவான தினத்தை இந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கூறினார். அதன்படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு மாநில உருவான தினம் கொண்டாடப்படுகிறது.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பாரதம் என்பது ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. பழைய பாரதத்தில் பிரிவினை என்பது அறவே கிடையாது. பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது” என்று கூறினார். மேலும், “ஆங்கிலேயர் ஆட்சியில் தான் இந்தியாவில் பிரிவினைவாதம் உருவானது. சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர் மேற்கொண்டனர். பாரதம் என்பது ஒரே நாடு அதில் பல்வேறு மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
“இந்தியா அமெரிக்கா போல் மாகாணங்களை கொண்டது இல்லை. ஒரே இந்தியா தான், அதில் பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக ஜாதி மதம் மொழி இனம் என்ற அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.” என்று ஆர்.என். ரவி கூறினார்.
“இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மக்கள் எந்த மாநிலத்திற்கும் சென்று வணிகம் செய்து வந்தனர். அப்போதய மக்கள் அவர்களை அரவனைப்போடு கவனித்தனர். இத்தகைய கலாச்சாரத்தை நாம் மறக்கக்கூடாது. பாரதம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்டது.ஒரே கலாச்சாரம் என்பது பாரதத்தில் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட கலாச்சாரங்களே இப்போதைய இளைஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இது மாற வேண்டும். இன்றைய இளைஞர்கள் இந்திய கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். மாநிலங்கள் உருவான தினத்தை கொண்டாடுவதில் நாம் பெருமை கொள்கிறோம்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
மாநிலங்கள் தின விழா கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 9 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் உருவான தின கொண்டாட்டத்தில் ஆளுநர் ரவி அவர்கள், பாரதத்தின் கலாசார செழுமையைக் கொண்டாடும் இந்த தனித்துவமான முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துடன் இந்த கலாசார தொடர்ச்சியின் பலம் காலங்காலமாக ஒரே தேசமாக எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பதை வரலாற்றுக் குறிப்புகளுடன் விவரித்தார்.
நவீன கால மாநிலங்கள் மற்றும் அரசியல் தோன்றல்களால் நமது வாழ்வின் தனித்தன்மையான பன்முகத்தன்மை பிளவுபட்ட ஒன்று என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் கீழ் பாரதத்தின் சாரத்தை புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடனும், ஆழமான ஒற்றுமை உணர்வுடனும் புத்துயிரூட்டி வருகிறோம். இதற்கு வித்திட்ட பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைக்கு நன்றி!
வெறும் சடங்காக இருந்த மாநிலம் உருவான நிகழ்வை துடிப்பான விழாவாக மாற்றி, அதில் சமூகத்தின் தீவிர பங்கேற்பை செழுமைப்படுத்தி நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது, நமது ஒற்றுமையின் உண்மையான உணர்வைப் போற்றும் ஒரு சீரிய முன்முயற்சியாகும்.
பாரதத்தின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஆளுநர் எச்சரித்தார். சமூக பாகுபாடு உள்ளிட்ட இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக சமூகம் ஒற்றுமையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நமது ஒற்றுமையைப் பாதுகாக்க அந்த அச்சுறுத்தல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த கொண்டாட்டத்தில் இடம்பெற்ற மாநிலங்களின் துடிப்பான கலாசார நிகழ்ச்சிகள், அவற்றின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தியதுடன் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை பிரதிபலித்தன” என்று குறிப்பிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.