Governor RN Ravi says India is built by Sanathana Dharma: சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ள நிலையில், ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், சென்னை வானகரத்தில், 'ஹரிவராசனம்' பாடல் இயற்றப்பட்ட 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ”சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நமது எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. அதுவே கடவுள். வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்.
இதையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆய்வு விவகாரம்; அறநிலையத்துறை புதிய அறிவிப்பு
மேலும், நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்திலிருந்து வந்தவையே. இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப் போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். மேலும், வல்லரசு நாடகம் நாம் வளர்ந்துவரும் நிலையில், இங்கு தலைமைப் பதவியில் இருப்பவர்கள் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவேண்டும்,” எனப் பேசினார்.
ஆளுநரின் இத்தகையப் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ”மதவாத, சனாதன தர்ம, வருணாசிரம, வன்முறை கருத்துக்களை ஆளுநர் பதவியிலிருந்துக் கொண்டு கூறுவது நல்லதல்ல, சனாதனத்திற்கு ஆதரவாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல, வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்கு உரியது, ஆளுநர் தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும்” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ”சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநர் பேசலாம். ஆனால், அவர் ஆளுநர் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு, பேச வேண்டும். ராஜினாமா செய்துவிட்டு அவர் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாகவும் பேசலாம், பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக அல்லது கொள்கைப்பரப்பு செயலாளராகக்கூட செயல்படலாம்" என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க சதி செய்கிறது, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.