Advertisment

மோடி ஆட்சியில் ஒருங்கிணைந்த வளர்ச்சி: கோவை அமிர்தா பல்கலை விழாவில் ஆளுனர் ஆர்.என் ரவி பேச்சு

கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் 19 வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

author-image
WebDesk
New Update
Governor RN Ravi, integrity growth in Modi Government, Tamilnadu, Coimbatore, ஆளுனர் ஆர்என் ரவி, மோடி ஆட்சியில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, கோவை அமிர்தா பல்கலை விழாவில் ஆளுனர் ஆர்என் ரவி பேச்சு, Governor RN Ravi, Modi Government

கோவையில் அமைந்துள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் 19"வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் 588 மாணவிகள் மற்றும் 1220 மாணவர்கள் உட்பட 1808 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

Advertisment

'நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்தத் தருணத்தில் ஆசாதி கா அமிர்த் மகோத்சவ் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவே மேன்மைப் படுத்துவதற்கு சரியான அறிவு, திறன்கள் மற்றும் இந்தியாவின் மதிப்புகளை எடுத்துரைக்கும் இளைஞர்களை எதிர்நோக்குகின்றோம்.

publive-image

அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் பயிலும் மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக மற்றும் மனித நேயத்தலைவி ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவியின் (அம்மா) அவர்களின் ஆசியைப் பெரும் அரிய பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். உண்மையில் அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.

அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் இன்று பட்டம் பெரும் இளைஞர்கள் அனைவரும் தங்கள் அர்ப்பணிப்பும் ஊக்கமும் மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தீர்வுகள் – தொழில் நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் நம் தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத் தக்க பங்களிப்பை தர முடியும்' என்று குறிப்பிட்டார்.

publive-image

மேலும் அவர் சிறப்புரையில் பேசியதாவது, “நமது நாடு பல்வேறு வகைகளில் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய பாரதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு ஒருங்கிணைந்த வளர்ச்சி பல்வேறு துறைகளில் காணப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு மொழி, கலாச்சாரம் மற்றும் இடம் சார்ந்து பல்வேறு வேறுபாடுகள் இருந்து வந்தது. இதனால் வளர்ச்சி தடைப்பட்டது. ஆனால், இன்று பிரதமரின் தலைமையில் இந்தியா ஒரே நாடு என உணரப்பட்டு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லப்படுகிறது.

அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது, வீடில்லாத நிலை என்ற நிலை மாற்றப்பட்டு அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி காணப்படுகிறது.

publive-image

இதற்கு முன்பு அரசாங்கத்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம் என்று இருந்த நிலை மாற்றப்பட்டு தற்போது அனைவரும் ஒன்றிணைந்து குறிப்பாக அனைத்து பிரிவு மக்களும் ஒருங்கிணைந்து வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விதமாக நாடு முன்னேறி செல்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு பொதுமக்களை நம்புவது அவசியமாகும். குறிப்பாக இளைய தலைமுறையினர் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 700க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள் உருவாகியுள்ளது. இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் எடை குறைவான சிறிய ரக செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாணவர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதான் நமது நாட்டின் இளைஞர் சக்தி.

குறிப்பாக மகளிர் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 'பேட்டி பசாவு பேட்டி பதாவு' என்ற திட்டங்களின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. தற்போது ராணுவத்திலும் மகளிர் காண வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் பாலின வேற்றுமை என்பது இருந்து வந்த நிலையில் 2021 சென்சஸ் கணக்கு வெளிவராத போதும் அது குறித்து வெளிவந்த தகவல்களில் முதல் முறையாக ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.இதுவே நமது நாட்டின் சிறப்புமிக்க சக்தியாகும்.

publive-image

இன்று உலக நாடுகள் இந்தியாவை பல்வேறு விஷயங்களிலும் எதிர்நோக்கி உள்ளது. குறிப்பாக பெருந்தொற்று காலகட்டத்தில் உலகமே செய்வதறியாது திகைத்திருந்த நேரத்தில் நமது நாட்டு விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை சிறப்பான முறையில் மக்களுக்கு செலுத்தி சாதனை படைத்தனர். இதற்காக நமது விஞ்ஞானிகளுக்கு நன்றிகளை செலுத்த வேண்டும்.

மற்ற நாடுகள் தடுப்பூசிகளை வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் நமது நாட்டில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டதோடு மற்ற நாடுகளுக்கும் வழங்கினோம்.

உலகத்தையே நமது குடும்பமாக நினைப்பது தான் நமது அடையாளம். காலநிலை மாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக உருவாகி வரும் சூழலில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகிறது. இந்தியா சுற்றுச்சூழலை பாதிக்காத மாற்று சக்திகளுக்கான முன்னெடுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டு இந்தியா முன்னெடுத்த சர்வதேச சூரிய சக்தி ஒப்பந்தத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பல நாடுகளும் ஒத்துழைக்காத நிலையில் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல நாடுகளும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர்க்காலகட்டத்தில் இந்தியாவால் போர் சூழலை சரி செய்ய முடியும் என உற்று நோக்கப்பட்டது. இதற்கு காரணம் இரு நாடுகளும் இந்தியாவின் கருத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தது தான். இதுதான் உருவாகி வரும் புதிய இந்தியா.

2047 ஆம் வருடம் இந்தியாவின் 100வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகி பல்வேறு துறைகளில் மற்ற நாடுகளுக்கும் முன்னோடியாக திகழ வைக்க வேண்டும்.

இந்தியா வறுமையான நாடு என்ற பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா செழுமையாக இருந்தது. காலணி ஆதிக்கத்தின் பிறகு தான் இந்தியா வறுமையான நாடாக மாற்றப்பட்டது

இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதோடு நமது பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்து பெருமை கொள்ள வேண்டும்.

கிறிஸ்து பிறப்பதற்கு 3100 ஆண்டுகளுக்கு முன்பு கோள்களின் நிலையை கண்டறிந்து பஞ்சாங்கத்தை உருவாக்கி சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என இந்தியர்கள் சரியாக கனித்திருந்தனர்.

இதுபோன்று இந்தியாவின் பழமையை இன்றைய இளைஞர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நீங்கள் மாணவர்களாக இருக்கலாம். நாளை வேலை தேடுபவர்களாகவும் பல துறைகளில் பணிபுரிபவர்களாகவும் வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்களாகவும் உருவாக உள்ளீர்கள்.

எனவே இதனை உணர்ந்து மன உறுதியோடு தன்னம்பிக்கையாக பெரிய கனவுகளை காண வேண்டும்.

கனவுகள் காண்பதோடு மட்டுமில்லாமல் கடின உழைப்பின் மூலம் கனவுகளை அடைந்து நாட்டிற்கும் உங்களது குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் தெரிவித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore Tamilnadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment