Advertisment

மக்களை மையப்படுத்தி சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுத வேண்டும்: ஆளுனர் ஆர்.என் ரவி

சுதந்திர போராட்ட வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை அவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

author-image
WebDesk
New Update
Govenor RN Ravi, Tiruchi news, Tamil news, latest tamil news, Tamilnadu news

திருச்சி தேசியக்கல்லூரியும் தேசிய சிந்தனைக் கழகமும் இணைந்து முப்பெரு விழா ஒருநாள் தேசியக் கருத்தரங்கினை 12.12.2002 இன்று நடத்த்தினர். பாரதியாரின் பிறந்த நாளையொட்டிய தேசிய மொழிகளின் தினத்தையும், இராமலிங்க வள்ளலாரின் 2010 ஆவது ஆண்டு ஜெயந்தியையும், இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த அமுதப் பெருவிழாவையும் சேர்த்து முப்பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி "இந்திய விடுதலைப் போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு” என்னும் பொருண்மையில் ஒருநாள் தேசியக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

தேசியக்கல்லூரியின் பத்மவிபூஷண் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி அரங்கத்தில் இக்கருத்தரங்கம் திருவிளக்கு ஏற்றி, பாரததாய், பாரதியார், வள்ளலார் திருவருவப்படங்களுக்கு மலர் தூவி தொடங்கப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்தோரைக் கல்லூரி முதல்வர் முனைவர் சி.குமார் வரவேற்றார். அப்பொழுது பாரத தேசத்திற்கும் சமூகத்திற்கும் தேசியக்கல்லூரி ஆற்றிய அரும்பணிகளை எடுத்துரைத்தார். தேசியக்கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர். என்.எஸ் . பிரசாத் தம் தலைமையுரையில் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் கல்வி நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவுபடுத்தினார்.

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இரா. மாது, பாரதியாரின் ஒருமைப்பாட்டு உணர்வு, வள்ளலாரின் ஜீவகாருணிய சிந்தனை, தேசியக் கல்லூரியின் நாட்டுப்பற்று வரலாறு ஆகியவற்றைத் தம் நோக்கவுரையில் எடுத்துரைத்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் மாணிக்கவாசகம் தம் வாழ்த்துரையில் தேசியக்கல்லூரியின் பணிகளையும் தேசிய சிந்தனைக் கழகத்தின் 'காண்டீபம்' இணைய இதழின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.
இத்தொடக்க விழாவிற்குத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர்தம் உரையில் விடுதலைப்போராட்ட வரலாற்றில் மொழி, இலக்கியங்கள் ஆற்றிய சீரிய பணிகளை எடுத்துரைத்தார். இன்று மக்களுக்குத் தேவையான வரலாற்று அறிவையும் வாழ்வியல் விழுமியங்களையும் இதுபோன்ற கருத்தரங்கங்களே தரவல்லன எனவும் கூறினார்.

தொடக்கவிழாவின் நிறைவாக இந்த முப்பெரு விழாவிற்கும் தேசியக்கல்லூரிக்குமான தொடர்பை, இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே செயின் ஜாஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய ஆர்யா (எ) பாஷ்யமும், வள்ளலார் புகழை உலகிற்குப் பரப்பிய ஊரன் அடிகளும் தேசியக் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் என்றும், பாரதியாரைச் சுதேசமித்திரன் இதழில் பணியமர்த்தி, அவர் பார் போற்றும் புகழைப் பெறுவதற்குக் காரணமான பேரா ம.கோபாலகிருஷ்ணய்யர் இக்கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவர் என்றும், இன்றைய தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் தம் நன்றியுரையில் நினைவு கூர்ந்தார்.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து அமர்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வின் காசர்கோடு கேரள மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் என். அஜித்குமார், 'இந்திய வீடுதலைப் போராட்டத்தில் மலையாள மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு இரண்டின் கர்நாடகா அரசு முதல்நிலைக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அஜகலாகிரீஷ் பட், 'இந்திய வீடுதலைப் போராட்டத்தில் கன்னட மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், அமர்வு மூன்றில் ஆந்திராவின் இந்து கல்லூரிக் கமிட்டி, துணைத்தலைவர் முனைவர் சிங்கம் வெங்கட் லெட்சுமிநாராயணா, 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தெலுங்கு மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும், நான்காம் அமர்வில் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன், 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பு' என்னும் பொருண்மையிலும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
ஒவ்வொருவரும் விடுதலை வேள்வியில் தென்னிந்திய மொழிகளின் இலக்கிய ஆளுமைகள், நாட்டுப்பற்றையும் சுதந்திர உணர்ச்சியையும் தத்தம் படைப்புகளில் எவ்வாறு மிளிரச் செய்துள்ளனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தனர்.

இவ் அமர்வுகளுக்குக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணையேந்தர் முனைவர் என். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆய்வுகளின் மீதான தம் மதிப்புரையைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

முன்னதாக, இந்திய விடுதலைப்போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்கிற கருத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதில், நம் நாட்டில் இந்திய விடுதலை போர் மிகப்பெரிய இயக்கமாக நடந்தது. அதில் ஏராளமானோரின் பங்களிப்பு இருந்தது. அன்றைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இருந்தது. அதில் இருந்தவர்களும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆனால் அவர்களை தவிர ஏராளமானோரும் பங்கேற்றார்கள். ஆனால் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். கிராமம் கிராமமாக போராட்டங்கள் நடந்துள்ளது எனவே சுதந்திர போராட்டம் மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்படுத்தி அது திருத்தி எழுத்தப்பட வேண்டும்.

பிரிட்டிஷ் வருகைக்கு முன் இந்திய கிராமங்கள் தன்னிறைவாக இருந்தன. ஆனால் அவர்கள் வருகைக்கு பின் பல வரிகள் விதிக்கப்பட்டதால் கிராமங்களில் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களும் சுதந்திரத்திற்காக தான் போராடினார்கள். சுதந்திரத்திற்காக போராடிய அனைவரும் சுதந்திர போராட்ட வீரர்கள் தான்.

இன்று சுதந்திர போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த அவர்களின் சிறை சென்ற ஆவணங்களை கேட்டால் பென்சனுக்காக என கூறி சுய மரியாதை காரணமாக பலர் அந்த ஆவணங்களை தரமாட்டார்கள். அதனால் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் போய்விடும் எனவே அதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும். நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மக்களுக்கு அதிகம் தெரிந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே அவ்வாறு தான் மக்களுக்கு தெரிந்தார்.

நான் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பட்டியல் கேட்டேன் வெறும் 30 பேர் பட்டியல் மட்டும் தான் தந்தார்கள் தற்பொழுது நான் அது குறித்து கவனம் செலுத்தும் போது 800-க்கும் அதிகமானோர் பட்டியல் உள்ளது.

இன்று காலனியாதிக்க சிந்தனை நம் மனத்தில் உள்ளது. காலனியாதிக்க சிந்தனை எச்சத்தின் வெளிப்பாடே ஆங்கில மொழி தான் உயர்ந்தது என்கிற எண்ணம். ஆனால் நம் தமிழ், சமிஸ்கிருதம் போன்றவை ஐரோப்பிய மொழிகளை காட்டிலும் வளமிக்கவை அதை நாம் உணர வேண்டும்.

1857 ஆம் ஆண்டு தான் சுதந்திர போராட்டம் தொடங்கியதாக வரலாற்றில் பதிவாகி உள்ளது. ஆனால் 1806 ஆம் ஆண்டே சிப்பாய் கலகம் வேலூரில் நடந்தது அதில் பல பிரிட்டீஷ் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். காலனியாதிக்கம் தொடங்கிய போதே அதை எதிர்த்து நாம் போராடினோம் அவையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்.

நம் மக்களின் அடையாளம், கலாச்சாரம் போன்றவற்றை அழிக்க பிரிட்டிஷ் முயற்சித்த போதே அதை எதிர்த்து போராடியுள்ளோம்.

சுதந்திர போராட்ட வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை அவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.

சுதந்திர போராட்டம் என்பது எழுதப்பட்டும் இருக்கும், எழுதப்படாமல் நாடகம் உள்ளிட்ட கலைகளாகவும் இருக்கும். எனவே, அவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கோடிக்கணக்கானோர் போராடி உள்ளார்கள். பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அவர்கள் பலரின் வரலாறுகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனவே ஆராய்ச்சி மாணவர்கள், வரலாற்றறிஞர்கள் போன்றோர் இந்த வரலாற்றை சரியாகவும் முறையாகவும் ஆவணப்படுத்தி அதை திருத்தி எழுத வேண்டும் என்றார்.

பேராசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்ற இந்நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் சா.நீலகண்டன், முனைவர் க.புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

திருச்சிக்கு விமான மூலம் வந்த ஆளுநரை விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment