“நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பதவியில் இருந்து விலகிவிடுவேன்.” என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் கேந்திரைய வித்யாலயா மாணவர்கள் மத்தியில் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஏப்ரல் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ஆளூநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆளுநர் ஆர்.என். ரவி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு, மண்டபம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ராமநாதபுரம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மாணவர்கள் மொபைல் போன் போன்ற பொழுதுபோக்குகளில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாகப் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். அதனால், மாணவர்கள் மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த யோகாசனம் செய்யுங்கள். இடர்பாடுகள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நிச்சயம் முன்னேறலாம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பதவியில் இருந்து விலகிவிடுவேன்.” என்று கூறினார்.
இதையடுத்து, இராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் மாணவர்களிடம் ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது, “ஒழுக்கம் முக்கியமானது. சுய ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரை மதியுங்கள். சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள். உங்களுடைய விளையாட்டு நேரத்தை சமநிலைப்படுத்தி கடினமாகப் படியுங்கள். நன்றாக உணவருந்தி ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
.வெற்றியாளராக திகழுங்கள், உங்களையும், உங்கள் பள்ளியையும், தேசத்தையும் பெருமைப்படுத்துங்கள்.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டவையே” என்று கூறினார். இதற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசும், ஜனாதிபதியும் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினர். இது தமிழகத்தில் ஆளூம் தி.மு.க அரசுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், “நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பதவியில் இருந்து விலகிவிடுவேன்.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“