டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை பரிந்துரைத்த தமிழக அரசின் ஆவணத்தை திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நியமனம் தொடர்பாக வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
2021ல் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபோது தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையும் படியுங்கள்: ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, டாஸ்மாக் கணினிமயமாக்கம் பணிகள் தீவிரம்: அமைச்சர் முத்துசாமி
இந்நிலையில் தமிழக அரசின் பணிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவர் பதவிக்கு முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதேபோல் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்தது குறித்து அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல டி.என்.பி.எஸ்.சி.,யில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். பல்வேறு காரணங்களைக் கூறி கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர், நியமன அறிவிப்பை எப்படி வெளியிட்டீர்கள் என்று கேட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. அப்படி வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனம் தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் கேட்டுள்ளார்.
பொதுவாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபுவுக்கு 61 வயது பூர்த்தியாகிவிட்டது. எனவே இதில் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறியுள்ள ஆளுநர் ரவி, டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர் தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil