60 ஆண்டுகளாக சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தான் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது, சனாதன தர்மத்தை மீட்டெடுத்தவர் வள்ளலார் என அவர் கூறினார்.
குறிப்பாக, "60 ஆண்டுகளாக இரவும், பகலும் தமிழ்நாட்டில் சமூக நீதி குறித்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. சாதிய ஏற்றத்தாழ்வுகள் தமிழ்நாட்டில் உள்ளன.
தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தான், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றளவும் தமிழ்நாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சமூக நீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும். வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார்.
ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் மொழி மேம்படுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை ஆங்கிலேயர்கள் அழிக்கப் பார்த்தனர். அப்போது, வள்ளலார் தான் சமஸ்கிருதத்தை மீட்டார்" என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், சமூக நீதியை காத்தவர் வள்ளலார் தான் எனவும், பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
இந்த வரிசையில் வள்ளலாருக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது அரசியல் களத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.