திருச்சி மாவட்டம், முசிறியில் அமைந்துள்ள எம்.ஐ.டி வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற தேவராட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்டவற்றை ஆளுநர் கண்டுகளித்தார். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்த விழாவில் பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம்; இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் தெரிவித்தார் இதைத் தொடர்ந்து, "நானும் எனது துணைவியாரும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறோம். இயற்கை விவசாய பொங்கலில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
உணவு அளிக்கும் விவசாயிகள் அனைவரும் உயர்குலத்தை சார்ந்தவர்கள். நாலடியாரில் அதற்கான குறிப்பு உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்க்கு வருவதற்கு முன் 1 ஹெக்டேருக்கு 6 டன் உணவு விவசாயம் செய்தார்கள். அதன் பின் ஆங்கிலேயர்கள் உரம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள். இதனால் மண் மலட்டு தன்மையாக மாறியது. இதை நம்மாழ்வார் சொல்லி தான் அறிந்து கொள்ள முடிந்தது.
முதன் முதலில் உரம் வைத்த போது பயிர் நன்றாக வளர்ந்து உற்பத்தி பெருகியது. பின்னர் மண்ணின் தன்மை மலடாக மாறியதால் விவசாயம் குறைந்து . இதை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நம்மாழ்வார் கூறியது போன்று வருகின்ற காலம் இயற்கை விவசாயதிற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இன்று நாட்டினுடைய விவசாய வருமானம் குறைந்த அளவு உள்ளது. வெளிமாநிலத்தில் அரிசி வாங்கி சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
செயற்கை உரம், செயற்கை பூச்சி கொல்லி மூலம் விவசாயம் செய்தால் தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நமது பாரத பிரதமர், நம்மாழ்வார் போன்று இயற்கை விவசாயம் செய்து 2030 ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். நாம் பாரத பிரதமருக்கும், விவாசயத்திற்க்கும் உறுதுணையாக இருப்போம்.
முதன் முதலாக டிராக்டர் அறிமுகப்படுத்தபட்டபோது இது சாணி போடுமா என்று இராஜாஜி கேட்டார். அதற்கான காரணம், சாணி எருவாக நமக்கு பயன்பட்டது. நவீன தொழில் நுட்பம் விவசாயத்தை அழிக்கும் வகையில் இருக்கக் கூடாது" எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து, இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சியினை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் விவசாயிகள் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.