தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் தமிழக மக்கள் மத்தியில் இந்தி கற்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும், மக்களைக் கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கிறார்கள் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டத்துடன் இந்தி மாதம் நிறைவு நாள் விழாவையும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது 86 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் பல உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து, தி.மு.க 1967-ல் ஆட்சிக்கு வந்தது. 1963-65 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க-வுக்கு பெரிய அளவில் பங்கு உள்ளது.
தமிழ்நாட்டில் 1967-க்குப் பிறகு, தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய 2 திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இரண்டு கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவையே. தொடர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய கட்சிகளும் பேசி வருகின்றன. இப்போதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற முழக்கத்தை அணையாமல் காத்து வருகின்றன.
இந்நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டத்துடன் இந்தி மாதம் நிறைவு நாள் விழாவையும் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்கலாம் என்றும் இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தார்.
டிடி தமிழ் தொலைக்காட்சி பொன்விழாவில் இந்தி மாதம் நிறைவு தின விழா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள் தான் என்றும் தமிழக மக்களிடையே இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றும் இங்கே இந்தி திணிக்கப்படவில்லை” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
மேலும், “கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர்.” என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பலமுறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. இந்தியாவின் அங்கமான தமிழ்நாடு எப்போதும் இருக்கும்.” என்று கூறினார்.
“தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவைவிட்டு வெளியே கொண்டுசெல்ல என்ன செய்தனர்” என்று கேள்வி எழுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழ்நாட்டில் மட்டுமே மூன்றாவது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர்; பிற மாநிலங்களில் அனுமதிக்கின்றனர். மக்களைக் கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் முயற்சிகள் நிறைவேறாது; இந்தியாவின் பலமான அங்கமாக தமிழ்நாடு எப்போதும் இருக்கும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.