சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், விவேகானந்தர் அரங்கில் பிரதமர் மோடி குறித்த 2 வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் தொடர்கின்றன.” என்று கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பிரதமர் மோடி குறித்த 2 நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.என்.ரவி, ‘மோடி @20 நனவாகும் கனவுகள்’, ‘அம்பேத்கர் மற்றும் மோடி-சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்’ ஆகிய 2 நூல்களை வெளியிட்டார். இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நுல்களைப் பெற்றுக்கொண்டார்.
இரண்டு நூல்களையும் வெளியிட்ட பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், சமூகநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து சிந்தித்தவர்; பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்தவர் அம்பேத்கர்
பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் 100 பேரில் 93 பேர் தப்பித்து விடுகின்றனர். பட்டியலின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 7% பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் தொடர்கின்றன. கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது உள்ளிட்ட சம்பவங்களும் இன்றும் தொடர்கின்றன.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ்; மோடி @20 மற்றும் அம்பேத்கர் & மோடி என்ற 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது பெருமைக்குரியது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை தன்னுடைய குடும்பமாகப் பார்க்கிறார். தன்னுடைய ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கு அவர் உணவு வழங்க செயல்பட்டு வருகிறார். மோடியின் பேச்சுக்களை இன்று உலகமே உற்று நோக்குகிறது.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"