சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு, நமது நாட்டில் சாதிகள் இல்லை என்றும் 4 பிரிவுகள் மட்டும்தான் இருந்தது என்றும் ஆங்கிலேயர்கள்தான் சாதிகளை உருவாக்கினார்” என்றும் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி-யின் அரசியல் ரீதியான கருத்துகளுக்கு தி.மு.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து தெரிவித்த கருத்துகள், வள்ளலார் பற்றிய கருத்துகள், திராவிட சித்தாந்தம் குறித்து தெரிவித்த கருத்துகள், காவி ஆடையில் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் புகைப்படம் என பலவும் ஆளுநர் கருத்துகள் தமிழக அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையாகி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார் என்றும் ஆளுநர் பா.ஜ.க-காரரைப் போல செயல்படுகிறார் என்றும் ஆளுநர் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கிறார் என்றும் தி.மு.க தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “பண்டைய பாரதத்தில் இருந்த பண்பாடும், நாகரீகமும் உலகுக்கே எடுத்துக்காட்டாக இருந்தன. மக்கள் எந்த பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக இருந்தனர். ஏனென்றால், அந்தக் காலத்தில் சாதி என்கிற முறையே இல்லை. செய்யும் தொழிலுக்கு ஏற்ப பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன. இவர்களை தவிர முஸ்லிம்கள் இருந்தனர்.
அப்போது, தொழில் ரீதியான பிரிவுகள் மட்டுமே இருந்ததால் மக்களிடையே எந்த வேற்றுமையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தனர். யாரும் யாரையும் அடிமைப்படுத்த எண்ணவில்லை. அது மட்டுமா? அன்றைக்கு கல்வியிலும், அறிவிலும் உயர்ந்து விளங்கிய பிராமணர்கள், அனைவருக்கும் பாகுபாடின்றி கல்வியை கற்றுத் தந்தனர்.
1820-களில் பிராமணர்கள் கற்றுக்கொடுத்த கல்வி முறைக்கு எந்தக் கட்டணமும் இல்லை. அன்றைய காலத்திலேயே இலவச கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் நாம் தான்.
ஏனென்றால், அன்றைக்கு கல்வி என்பதும், அதை கற்பிப்பதும் புண்ணியமாக கருதப்பட்டது. அதனால், பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் பிராமணர்கள் பிறருக்கு கல்வி கற்றுக் கொடுத்தனர். ஆங்கிலேயர்கள் வந்ததற்கு பிறகுதான், இந்த கல்வி முறை திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது. சாதிகளையும் ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“