தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி அரசு கொடுத்த உரையில் திராவிட மாடல், அம்பேத்கர் பெயர் அடங்கிய ஒரு பகுதியை விட்டுவிட்டு வாசித்ததற்கு தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தடையடுத்து, பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். ஆளுநர் வெளி நடப்பு செய்ததற்கு தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, த.வா.க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (ஜனவரி 09) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசித்தபோது, தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல், சமூக நீதி, அமைதிப் பூங்கா, அம்பேத்கர் பெயர் அடங்கிய பகுதியை ஆளுநர் தவிர்த்துவிட்டு வாசித்தார். ஆளுநர் தனது உரையில் ஒரு பகுதியைத் தவிர்த்ததற்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் அவையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஒரு பகுதியைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அச்சடிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஆளுநர் உரையில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதே போல, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் அவையில் இருந்து வெளியநடப்பு செய்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் ஒரு பகுதியைத் தவிர்த்துவிட்டு வாசித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் அவையில் இருக்கும்போதே தீர்மானம் கொண்டுவருவது மரபு அல்ல அதனால் தான் வெளியேறினோம் என்று கூறினார். மேலும், அரசு ஆளுநர் உரையை அனுப்பி முன்னதாகவ முறையான ஒப்புதல் பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில் ஒரு பகுதியை தவிர்த்துவிட்டு வாசித்ததுடன், தேசிய கீதம் இசைக்கப்படும் வரை அவையில் இருக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர், எம்.எல்.ஏ வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில் அரசு தயாரித்து அளித்த உரையின் ஒரு பகுதியைத் தவிர்த்தது குறித்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்தும் சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவே ஏன் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று ஆளுநர் ஏன் கூறவில்லை என்று தெரியவில்லை. தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் அவையிலிருந்து ஆளுநர் புறப்படுவதே மரபு. ஆனால், அதற்கு முன்னரே அவர் வெளியேறினார். ஆளுநரின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது. ஆளுநர் உரையில் ஏற்கனவே அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது வேதனையளிக்கிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி உயர்பதவிக்கு ஆசைப்பட்டு இப்படி நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என அவர் கூறினார். தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து ஆளுநர் மரியாதை செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் சட்டசபையை விட்டு வெளியேறியது நாட்டையே அவமரியாதை செய்தது போன்றது. இது மிகப்பெரிய குற்றம் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்ர்களிடம் பேசியதாவது: “ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கைகளை எடுத்து சொல்லும் உரை. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்தாலும், அவர் பேரவைக்கு வந்த போது முழு மரியாதை அளித்தோம். சமூக நீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளார். ஆளுநர் பேரவையில் உரையை வாசிக்கும் போது நடைமுறைக்கு மாறாக, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக வாசித்தார் என கூறினார்.
மேலும், அம்பேத்கரின் பெயரைகூட ஆளுநர் தனது உரையில் புறக்கணித்துள்ளார். அண்ணா, பெரியார் பெயர்களை உச்சாரிக்காததை அ.தி.மு.க கண்டிக்கவில்லை.
தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காமல் பேரவையிலிருந்து ஆளுநர் கிளம்பிச் சென்றார். மேலும், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறியது அநாகரிகமான செயல் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அரசு தயாரித்த ஆளுநர் உரையை ஜனவரி 5-ம் தேதியே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஜனவரி 7-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆளுநர் உரையை ஒப்புதலுக்கு அனுப்பும்போது அந்த உரையில் எந்த கருத்து மாறுபாடும் இருப்பதாக ஆளுநர் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது அரசு கொடுத்த உரையில் ஒரு பகுதியை ஆளுநர் தவிர்த்துள்ளார்.”
என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, இது ஜனநாயகப் படுகொலை என்று கண்டனம் தெரிவித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை கூறியதாவது: “ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்தை புரியாமல் ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக இது போன்று எந்த ஆளுநரும் செயல்பட்டதில்லை. அரசு தயாரித்து கொடுத்த உரையைத் தவிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது ஜனநாயகப் படுகொலை” என்று கண்டனம் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன், “செந்தமிழ்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதவன் எவனாக இருந்தாலும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம். அது ஆளுநராகவே இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.” என்று காட்டமாகக் கூறினார்.
இதனிடையே, ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயல் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!.
அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.
தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பதிவிட்டிருப்பதாவது: “ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.