சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் தமிழக ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் சிவாச்சாரியார்கள் தமிழக ஆளுநருக்கு மாலை அணிவித்து கோயில் பிரசாதங்களை வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.
தொடர்ந்து கோயிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தார் பிறகு கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் திருதேரை பார்வையிட்டு கோயில் சிவாச்சாரியாருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். தொடர்ந்து தேவகோட்டை தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது, “கண்டதேவி புண்ணிய பூமி. ராமாயண தொடர்புடைய பூமி. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சமுதாய ஒற்றுமையுடன் தேரோட்டத்தை நடத்தியுள்ளது மகிழ்ச்சி. காந்தியடிகள் காலம் தொட்டு தேர் ஓடுவதில் பிரச்னை இருந்துள்ளது. ஆங்கிலேயரை போன்று, தற்போது உள்ளவர்களும் பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி தேரோட்டத்தை நடத்த முன்வரவில்லை. ஆங்கிலேயர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியை தமிழகத்தில் ஆட்சி செய்தவர்களும் கையாண்டு வந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் சாதிகள், உட்பிரிவுகள் உள்ளன என்றார். மேலும், இந்து தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். பக்தி அறிவியலுக்கு ஒவ்வாதது பக்தர்கள் அறிவியல் சிந்தனை அற்றவர்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது. நாடு முழுவதும் சிவன், சக்தி பெருமாளை வழிபாடுவது அறிவியல் சார்புடையது இல்லையா? ஆழ்வார்கள் நாயன்மார்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டவர்கள் இல்லையா ? அறிவியல் சிந்தனை அற்றவர்களா? பக்தி இருப்பவர்கள் அறிவியல் சிந்தனை அற்றவர்களா ? ஆலயங்கள் ஒழிய வேண்டும் பக்தர்கள் ஆலயம் செல்வதை மறக்கடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், இங்குள்ள மக்கள் அதை தோற்கடித்துள்ளனர்” என்று பேசினார்.