புதுவையில் தமிழில் மருத்துவப் படிப்பு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய்க்கிழமை (அக்.18) புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “புதுச்சேரியில் தமிழில் மருத்துவப் படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பாக முதலமைச்சர் ரெங்கசாமியிடம் பேசுவேன்” என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, பாரதிய ஜனதா ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 13 மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறு இயல், உடல் இயல், உயிர் வேதியியல் உள்ளிட்ட மூன்று இளநிலை மருத்துவ பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் இதனை கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியில் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படவுள்ளதை வெகுவாக பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “மருத்துவக் கல்வித்துறையில் இது மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது.
இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்க முடியும். அவர்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன” என ட்விட்டரில் கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“