scorecardresearch

பாராளுமன்றத்தில் செங்கோல், உலகிற்கு பறைசாற்றும் தமிழர்களின் நீதி வழுவாத ஆட்சி: தமிழிசை பெருமிதம்

அன்றைய தமிழர்களின் நீதிபரிபாலன முறை உலகத்திற்கே வழிகாட்டக் கூடியதாக அமைந்திருந்தது.

Tamil News
Tamilisai Soundararajan

தமிழர்களின் அரசாட்சி முறைக்கும் தகுந்த அடையாளமாக இருக்கும் செங்கோலை, பிரதமர் மோடி  பாராளுமன்றத்தில் நிறுவ இருப்பது காலம் உள்ளவரை நீதி வழுவாத அரசாட்சி முறையையும் உலகிற்கு பறைசாற்றுவதாக இருக்கும் என்று தமிழிசை கூறியுள்ளார்.

ஆளுனர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல். அன்றைய தமிழர்களின் நீதிபரிபாலன முறை உலகத்திற்கே வழிகாட்டக் கூடியதாக அமைந்திருந்தது. திருக்குறளில் வரும் “செங்கோன்மை“ அதிகாரம் தமிழர்களின் நீதி வழுவாத ஆட்சி முறையையும் நிர்வாகத்தையும் அழகாக எடுத்து உணர்த்தும்.

அதனால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, நாட்டின் அரசாட்சி “நீதி வழுவாமல் இருக்க வேண்டும்“ என்பதற்கு அடையாளமாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று இரவு அன்றைய பிரதமருக்கு செங்கோல் கைமாற்றப்பட்டது. தமிழகத்தில் திருவாடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த பொரியோர்களால் செய்யப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது என்பது தமிழர்களின் சிறப்பு.

அன்றைய நிகழ்வைப் பின்பற்றி, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி, புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் வரும் 28ந்  தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் செய்யப்பட்ட, தமிழர்களின் நீதி பரிபாலன முறையின் அடையாளமான செங்கோலை நிறுவுகிறார் என்பது தமிழர்களுக்கு பெருமை.

அதற்காக பாரதப் பிரதமருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்.

இதற்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் செங்கோல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீதி நடுநிலைமையை குறிப்பதற்காக நந்தி உருவத்தையும், நாட்டின் நிதி ஆதாரம் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மகாலட்சுமியின் உருவத்தையும், நாடு செழித்து ஓங்கி உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக படரும் கொடியையும் சித்தரித்திருக்கிறார்கள்.

தமிழர்களின் நீதி முறை சார்ந்த அரசாட்சிக்கும், வாழ்வியல் சிறப்புக்கும், அரசாட்சி முறைக்கும் தகுந்த அடையாளமாக இருக்கும் செங்கோலை  அதே வழியில் பிரதமர் நரேந்திர மோடி  பாராளுமன்றத்தில் நிறுவ இருப்பது காலம் உள்ளவரை தமிழர்களின் மாண்புகளையும், நீதி வழுவாத அரசாட்சி முறையையும் உலகிற்கு பறைசாற்றுவதாக இருக்கும் என்பது உண்மை. இவ்வாறு தமிழிசை செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Governor tamilisai soundararajan sengol new parliament building opening