திருவள்ளுவரை சனாதனக் கூண்டில் அடைத்து, காவி உடை அணிவிக்கும் ஆளுநர், முதலில் காவி உடை அணிய வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்து எழுதியுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிவிக்கப்பட்ட படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவியதற்கு கண்டனம் தெரிவித்து, முரசொலியில் தலையங்கம் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,"அரசியல் சட்டப்படி பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர் சட்டத்தை மீறி, தன் விருப்பதுக்கு வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரைச் சொல்வதற்கு கூச்சப்படுகிறார், சனாதன வகுப்பு எடுக்கிறார்; குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறார்; அம்பேத்கரை அசிங்கப்படுத்துகிறார்; அரசியல் சட்டமே குறைபாடானது என்கிறார்.
இவ்வளவு பெரிய மேதையாக இருக்கும் ஆளுநர் ரவியை இந்திய குடியரசுத் தலைவர் ஆக்கலாம். ஏன் ஐ.நா.சபைக்கே அழைத்து செல்லலாம்.
அங்கும் காவி உடையில் செல்லவும் ஆங்கிலேயே உடை, ஆங்கில மொழியை விடுத்து அவர் சொல்வதற்கு அவரே முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், 1967 ஆம் ஆண்டு திருவள்ளுவரின் வெள்ளுடை ஓவியத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த ஓவியம் தான் இடம் பெற வேண்டும் என்ற அரசாணை வெளியிட்டதையும் நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனையடுத்து, 1989 ஆம் ஆண்டு இந்த ஓவியம் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நிலையில், அரசியல் சட்டப்படி பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர், சட்டம் மற்றும் அரசாணைகளை மீறி, தன் விருப்பத்திற்கு வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசிக் கொண்டு இருப்பதாக முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
எனவே வான்புகழ் வள்ளுவரை கனாதன கூண்டில் அடைத்து காவி உடை அணிவிக்கும் ஆளுநர் முதலில் காவி உடை அணியட்டும் என்று தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.