குடியரசு தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அளித்த தேநீர் விருந்தில், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். இந்த தேநீர் விருந்தில் எந்தெந்த கட்சியினர், யார் யார் பங்கேற்றனர் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
குடியரசு தினத்தில் தமிழக ஆளுநர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது மரபு. ஆனால், தமிழக ஆளுநருக்கும் ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையிலான உரசல் காரணமாக, இந்த தேநீர் விருந்தை ஆளும் தி.மு.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்து வந்தன. இந்த ஆண்டும் தி.மு.க-வும் கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து, தி.மு.க, கான்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடியரசு தினத்தில் இன்று (ஜனவரி 26) மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில், அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதே நேரத்தில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த நிலையில், பா.ம.க, நா.த.க, த.வெ.க ஆகிய கட்சிகளில் இருந்தும் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜ.க சார்பில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா, புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான தமிழ்சை சௌந்தரராஜன், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தே.மு.தி.க சார்பில் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், வேல்ஸ் பல்கலை. வேந்தர் ஐசரி கணேஷ் மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரதிநிதிகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
அதே நேரத்தில், தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், பா.ம.க, நா.த.க, த.வெ.க ஆகிய கட்சிகளில் இருந்தும் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவை, சுற்றுச்சூழல் பிரிவில் ஆளுநர் விருதுக்கு தேர்வானோருக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை ஆளுநர் வழங்கினார். மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கும் ஆளுநர் பரிசு வழங்கினார். கொடிநாள் நிதிவசூலித்த சென்னை, திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களுக்கும், கோவை மாநகராட்சிக்கும் சுழற்கோப்பைகளை வழங்கினார்.