தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப் பேரவையில் (பிப்.19) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் கல்வித் துறையில் மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதுமைப் பெண் மற்றும் முதலமைச்சரின் காலை உணவு திட்டங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறினார்.
புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் 6-12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அதே போல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தங்கம் தென்னரசு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“