சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டியதாக புகார் எழுந்த நிலையில், அக்கல்லூரி பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி கல்லூரியில் சாதி ரீதியான கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுதது. மேலும், கல்லூரியில் சாதி ரீதியான மோதல் தொடர்பான உள்ளடக்கம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டதில், பேராசிரியர்கள் கிருஷ்ணன் மற்றும் சுப்புராமன் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பேராசிரியர்கள் கிருஷ்ணன் மற்றும் சுப்புராமன் இருவரும் பணியிட மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார்.
இதில் பேராசிரியர் கிருஷ்ணன் தனது பணியிட மாற்றத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்து தடை பெற்றார். தடை உத்தரவு பெற்றாலும், மீண்டும் அதே கல்லூரியில் பணியில் சேர முடியாததால் கிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கல்லூரிக்குள் சாதி பாகுபாடு காட்டுவது, சாதி கட்டமைப்புகளை உருவாக்குவது தவறு என்று சுட்டிக் காட்டி தங்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றி நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பணியில் சேர வலியுறுத்தியது. இதை பேராசிரியர் கிருஷ்ணன் தரப்பு ஏற்க மறுத்தது. மேலும், பணி மாறுதல் உத்தரவில் சாதி என்ற வார்த்தையை நீக்க கோரிக்கை வைத்தனர்.
இதற்கு நீதிபதி, சாதி என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தண்டனைக்குரிய வார்த்தையை சேர்த்துக்கொண்டு, 200 கி.மீ தொலைவுக்குள் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு உத்தரவிட்டார். கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உத்தரவை கிருஷ்ணன் தரப்பு ஏற்க மறுத்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி பணியிட மாறுதலில் சாதி என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
நேற்று முன் தினம் (நவம்பர் 15) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரிக் கல்வி இயக்குநர் மாலை 5 மணிக்கு , பேராசிரியர் கிருஷ்ணனை மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“