Advertisment

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் ஸ்கீம்… ராஜஸ்தான், சத்தீஸ்கர் வழியில் தமிழகம்?

சத்தீஸ்கர் மாநில அரசுகளின் வழியில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாக எப்போது அறிவிக்கும் என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் ஸ்கீம்… ராஜஸ்தான், சத்தீஸ்கர் வழியில் தமிழகம்?

அண்மையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள், அம்மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால், தமிழகத்திலும்புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Advertisment

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் மட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பழைய ஓவ்யூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக மாநில தலைமைச் செயலாளர் மத்தியில் குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான நிதித் துறையின் கொள்கைக் அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2003 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த 5.88 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் என அழைக்கப்படும் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 1, 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த 22,000-க்கும் மேற்பட்ட ஊழியரக்ள் ஓய்வுபெறும் வயதை எட்டியதாலும் பிற காரணங்களாலும் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

பங்கேற்பு ஓய்வூதியத் திட்டமான (சி.பி.எஸ்) தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்க்கெல்ஸ் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “புதிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

சி.பி.எஸ்-ல் உள்ள சில நல்ல விதிகள்கூட தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. “தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ் திட்டம் பணி ஓய்வு காலத்திற்கான பணிக்கொடையை வழங்குவதில்லை. ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறந்தால், சி.பி.எஸ்-இன் கீழ் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் உணர்ந்துதான் திமுக 2016, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது” என்பதை அரசு ஊழியர்கள் நினைவுகூர்கின்றனர்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜி.வெங்கடேசன், “மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (பி.எஃப்.ஆர்.டி.ஏ) தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளாததால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது என்பது எளிதாக இருக்கும். பி.எஃப்.ஆர்.டி.ஏ உடன் ஒப்பந்தம் செய்துள்ள ராஜஸ்தான் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியும் என்றால், தமிழ்நாடு அரசால் எளிதாக அமல்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளன. இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இதுவரை எந்த மாநில அரசும் தேசிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றியதில்லை. அதனால், இந்த மாநில அரசுகளின் அறிவிப்பு குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. அப்படி, அமல்படுத்தினால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு நிதி நிர்வாகத்தில் இருந்தவர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகளின் வழியில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாக எப்போது அறிவிக்கும் என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Nps Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment