பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அறிகுறி இல்லாமல் நன்றாக இருந்தால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி பலரும் வீட்டு தனிமையில் உள்ளனர். நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களைக் கொண்ட தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஹோம் குவாரண்டைன் என்கிற வீட்டுத் தனிமையில் வைத்துக்கொள்வது சாத்தியமா? வீட்டுத் தனிமையில் இருக்கும்போது, உடல்நிலை மோசமானால் என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதலில் பரவியபோது, பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் உடனடியாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் கொரோனா பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அல்லது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகள் அளிக்கப்படும். பின்னர், அவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் என்று வந்தால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அதே நேரத்தில், உடல்நிலை மோசமாக இருப்பவர்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும். மிகவும் அரிதாகத்தான் ஹோம் குவாரண்டைன் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தொற்று எண்ணிக்கை குறைந்த சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வீட்டுத் தனிமை என்பது கோவிட் தொற்று நோயாளிகளாலும் அவர்களின் குடும்பத்தினராலும் எந்தளவுக்கு கடைபிடிக்கப்படும் என்பது கேள்விக்குறிதான். பல வீடுகளில் கொரோனா தொற்று நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாத சூழலே இருக்கிறது. மேலும், கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்துக்கு செல்வதற்கு அச்சப்பட்டு பலரும் ஹோம் குவாரண்டைன் செய்துகோள்வதாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் வீடுகளில் ஹோம் குவாரண்டைனை முறையாக கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் பெரும்பான்மையினராக உள்ள மாநிலம் தமிழகம் போன்ற மாநிலத்தில் போதுமான வீட்டு வசதி இல்லாத சூழலில் நோயாளிகள் தனிமைப்படுத்திக்கொள்வது என்பது இயலாததாகவே உள்ளது.
ஆனால், அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்திலும் தற்போதைய திமுக ஆட்சியிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலரையும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இப்போதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஹோம் குவாரண்டைன் செய்வது தவறான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. ஹோம் குவாரண்டைன் செய்வதால் 2 வகையில் பாதகங்கள் உள்ளன. முறையாக தனிமைப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் அருகே உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது. அதே போல, ஹோம் குவாரண்டைனில் இருக்கும்போது, நோய் பாதிப்பு அதிகரித்து உடல்நிலை மோசமானால், அதன் பிறகு மருத்துவமனைக்கு செல்லும்போது சிகிச்சை அளிப்பது என்பது மேலும் கடினமாகிறது.
தமிழக அரசு தொடக்கத்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரையும் கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மற்றும் உணவு அளித்தது போல இப்போதும் செய்ய வேண்டும். இதனால், தொற்று பரவல் குறைவதோடு, நோயாளியின் உடல்நிலை மேலும் மோசமாகாமல் தடுக்கப்பட்டு உயிரிழப்பும் தடுக்கப்படும். அதனால், தமிழக அரசு, இந்த ஹோம் குவாரண்டைன் முறையை கைவிட்டு அனைவரையும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று குவாரண்டைன் செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை ஹோம் குவாரண்டைன் செய்வதை மறுபரிசீலனை செய்யுமா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.