Advertisment

7.5% இட ஒதுக்கீடு; 12,000 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும்: ஸ்டாலின் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள்தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
7.5% இட ஒதுக்கீடு; 12,000 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும்: ஸ்டாலின் அறிவிப்பு!

பொறியியல் கவுன்சிலிங்கில் முதன்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 15 அன்று தொடங்கியது.

Advertisment

இந்நிலையில், 7.5 சதவீதம் சிறப்பு உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 50 மாணவர்களுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், "அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதன்மூலம் 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன்பெற உள்ளனர்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கு இடம் கிடைக்குமா? அதுவும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்புவரை உங்களுக்கு இருந்திருக்கும். அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள்தான் இந்த நாள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இது மாணவர்களின் குடும்பத்தினரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். இந்த சேர்க்கை ஆணையை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், ஏன் கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ளும்

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் கிராமப்புற மாணவர்கள்தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறக் கல்வியின் மேம்பாட்டுத் திட்டமாக இது அமைந்துள்ளது.

நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தவர் கருணாநிதி

தொழில்முறை படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைவதை தடுக்கும் வகையிலிருந்த மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளைக் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் ரத்து செய்தது என்பதை நினைவுகூருகிறேன்.

தற்போது, நீட் தேர்வுக்கு எதிராக அரசு சட்டப் போராட்டம் நடத்துகிறது. சமூக நீதியை உறுதி செய்வதற்காக வெளியிடப்பட்ட அரசு உத்தரவுகள் சமத்துவ சமுதாயத்திற்கு அடித்தளமிடுகின்றன.

பொற்காலமாக மாற வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் உயர் கல்வி, தொழில்முறை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு பொற்காலமாக மாற வேண்டும்.

இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடையும் மாணவர்களில் யாராவது ஒருவர், என்னிடம் வந்து, பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன் அல்லது இட ஒதுக்கீடு காரணமாகச் சொந்தமாகத் தொழில் தொடங்கியுள்ளேன் என கூறினால், அதை விட மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது" என்றார்.

தொடர்ந்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் 1% மட்டுமே அரசு பள்ளிகளிலிருந்து வந்தவர்கள்" என தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்று அறிவிப்புக்கு, மாணவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Mk Stalin Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment