அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை, தேவைப்பட்டால், மீண்டும் திறக்கப்போவதாக தமிழக அரசு திங்கள்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் ஒப்பந்தங்களை வழங்குவதில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கை சுட்டிக்காட்டியது. இதனையடுத்து அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தது.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக அறப்போர் இயக்கம் தனது பொதுநல மனுவில் குற்றம் சாட்டியதோடு, முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
அறப்போர் இயக்கம் என்ற அரசு சாரா அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது. இந்த மனு திங்களன்று மேலதிக விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் முதல் பெஞ்ச்க்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு எதிரான புகார்களில் தொடர்புடைய சில அதிகாரிகளை விசாரிக்காமல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டி.வி.ஐ.சி) வழக்கை மூடிவிட்டதாக தெரிவித்தார்.
தேவைப்பட்டால், அரசாங்கம் வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கும் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும், தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.
இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil