காவிரியில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக்கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கன மழையின்போது தேடல், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்களும் நீலகிரி மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 9 மணி முதல் 2 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகக்கூடும்.
எனவே, இந்த மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனே தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 44 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவும் உடனடியாக திருச்சி மாவட்டத்திற்கு விரைந்து செல்லவும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா 40 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் அனுப்பிடவும் முதல்வர் அறிவுறுத்தினார். மேட்டூர் மற்றும் வைகை அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 21.87 லட்சம் செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பயிர்கள் நாசமடைவதை உடனடியாக ஆராய்ந்து அதற்கு சரியான நிவாரணம் அளிக்க வேண்டும் என்று முதலவர் உத்தரவிட்டார். மேலும் மழை நீவாரண முகாம்களை உடனடியாக தயார்படுத்தவும். அங்கு தேவைப்படும் உணவு, மருந்து மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மழை தொடர்பான புகார்களை 1070 மற்றும் 1077 எண்களுக்கு மக்கள் தொடர்ந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும் இந்த வாட்ஸ் ஆப் எண்களுக்கு 94458-69848 உங்கள் புகார்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“