ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ம் தேதி ‘சர்வதேச பழங்குடியின நாள்’ ஆக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று ‘சர்வதேச பழங்குடியின நாள்’ கொண்டாடப்பட்டது.
இந்திய நாட்டில் பழங்குடிகளாக வாழும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இன்றளவும் காணப்படுகிறார்கள். காரணம், அவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து தொழில் புரிபவர்களாக இருப்பதில்லை. மேலும், புதிய தொழில்களுக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதில்லை.
பழங்குடியினர் தினமும் இடம் பெயரும் தொழில்களைச் செய்வதால் இவர்களது குழந்தைகள் கற்றல் நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். சமவெளிகளில் வாழ்கின்ற பழங்குடியினர் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் படிக்க வைப்பதில்லை.
இந்த நிலையில், மேலக்கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் திரளான பழங்குடியின மாணவ மாணவிகள் பயில்கிறார்கள். இவர்களது பெற்றோர்கள் தினமும் இடம் பெயரும் நிலையிலும், தங்களது பாரம்பரியத் தொழில்களை செய்து வந்தாலும், தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து முறையாக கல்வி கற்க வைத்திருப்பதால், அவர்களை கௌரவிக்க ஆசிரியர்களின் குழு முடிவெடுத்தது.
இந்த கௌரவிப்புக்கு தலைமை ஆசிரியர் சற்குணம் தலைமையில் ஒரு குழு பழங்குடியினரின் வீட்டிற்கே நேரில் சென்றது. பள்ளி ஆசிரியர்கள் அருணா மற்றும் ப்ரீத்தா ஆகியோர் உடன் சென்ற மாணவ, மாணவிகள் பழங்குடியின பெற்றோர்களை நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி கௌரவித்து, இந்திய தேசியக் கொடியையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“