தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை ஆணவக் கொலை சம்பவத்தில் உயிர் பிழைத்த கௌசல்யா, சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், சக்தியை விட்டு பிரிவதாக கௌசல்யா ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா பெற்றோரின் எதிர்ப்பை மீறி பட்டியல் இனத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டினார்கள். இந்த சம்பவம் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோ நாட்டையே உலுக்கியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யா படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி குற்றம் இழைத்ததற்கான போதிய ஆவணங்களை காவல்துறையினர் தாக்கல் செய்யவில்லை என்று அவரை நீதிபதிகள் விடுதலை செய்தனர். மேலும், 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இதனிடையே, கௌசல்யாவுக்கு வன்கொடுமை பாதிப்புக்கான இழப்பீடாக அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. மேலும், கௌசல்யா சக்தி என்ற இளைரை காடலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது, சக்தி பெண்கள் விவகாரத்தில் மோசமானவர் என்ற புகார் எழுந்தது.

இந்தநிலையில்தான், கௌசல்யா, ‘நானும் சக்தியும் பிரிகிறோம். ஓராண்டாக மனதளவில் என்னை காயப்படுத்தியதால் இனி அவரோடு என்னால் வாழ இயலாது. விவாகரத்துக்கு திங்கள் விண்ணப்பிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கௌசல்யா அந்த பதிவை ஒரு சில மணி நேரத்தில் நேரத்திலேயே நீக்கிவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”