தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, நடிகை கௌதமி இன்று (சனிக்கிழமை) திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கௌதமி, பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு உள்ளது. மாற்று கருத்துக்கு வாய்ப்பே இல்லை என்னும் அளவிற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு அமோக வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக, பெரிய மாற்றத்தைக் காண உள்ளோம்.
திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரின் 'தீப்பெட்டி சின்னம்' பொது மக்களிடம் செல்ல வேண்டும் என்றால், தேர்தல் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிலர், தங்களின் சொந்த விருப்பத்தோடு போட்டியிட வரவில்லை என்றும் கட்டாயப்படுத்தி வந்ததாகவும் கூறுகின்றனர்.
நான் பார்த்த வரையில், மதிமுக வேட்பாளரும் அப்படிப்பட்டவர்தான். தனது விருப்பத்திற்காக போட்டியிடவில்லை என்றும் தனது தந்தைக்காகவும், கட்சியைக் காப்பாற்றவுமே வந்திருப்பதாகக் கூறியுள்ளார். அவரது பாசம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இருப்பதோ அப்பாவி மக்கள். யாரைப் பார்த்து, நான் உங்களுக்கு இருக்கேன் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்களோ, அவர்கள் அனைவருமே அப்பாவி மக்கள்.
மக்களுடைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒவ்வொரு வேட்பாளரும், முழு மனதோடு செயல்படுவதோடு, உறுதியோடும் இருக்க வேண்டும். இல்லையென்றால், அது மக்களுக்கு செய்யும் அநியாயமாகவும், துரோகமாகவுமே கருதப்படும்.
கடந்த 10 வருடத்தில் நம் மாநிலத்திற்கு, பிரதமர் மோடி மற்றும் அவரின் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் என எவருமே வந்ததில்லை. இதிலிருந்தே, அவரின் வருகைக்கான காரணம் தெளிவாகத் தெரிகிறது.
அரசியலில் மிகப்பெரிய கூட்டணி என்றுமே மக்களோடு தான் இருக்க முடியும். இதில் மாற்று கருத்து என்பது இல்லை. அத்தகைய மிகப்பெரிய மகத்தான கூட்டணியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களோடு வைத்திருக்கிறார். ஆண், பெண் சமம் என்பது உண்மையே. ஆனால், களத்தில் சரியான ஆட்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம். அந்தந்த தொகுதிக்கான சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தொகுதிக்கு யார் சரியான உறுப்பினர் என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்