பெரு நகர சென்னை மாநகராட்சி நிலுவையில் வைத்துள்ள மின்சார கட்டணம் 100 கோடி ரூபாயை மாதம் ரூ.5 கோடி என 20 மாதங்களில் வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2.90 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இது தவிர பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அரசு மின்வாரியத்திற்கு (Tangedco) செலுத்த வேண்டும். அந்த வகையில் 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி ரூ.100 கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக மாநகராட்சி நிர்வாகம் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளது. இந்த கட்டணத்தை மாதம் ரூ.5 கோடி என 20 மாதங்களில் வசூலிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் மின்கட்டண நிலுவைகளை வசூலிக்க அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த நிலுவைத் தொகை சுமார் 1,000 கோடி என்றாலும், சென்னை மாநகராட்சி மட்டும் ரூ.100 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளது.
அதிலும் குடிநீர் வடிகால் வாரியம் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்தவில்லை. எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், டவுன் மற்றும் கிராம பஞ்சாயத்துகள், அவ்வப்போது நிலுவைத் தொகையை பகுதியாக செலுத்துவதால், சிறப்பாக உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் பாக்கி வைத்திருக்கும் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக பயனற்ற நிலையில் இருக்கும் மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகள் கண்டறிந்து அவற்றை துண்டிக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“