Advertisment

சொத்துவரி விரைவாக செலுத்தினால் 5% ஊக்கப்பரிசு, தவறினால் 1% வட்டி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில், சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக சொத்து வரி செலுத்திவிடுங்கள், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி பெறலாம், இல்லாவிட்டால், 1% வட்டியுடன் கட்ட வேண்டி வரும் என்று சென்னை மாநகராசி அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Property tax Chennai Corporation sent notices to central govt offices Tamil News

சொத்துவரி குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மாநகராட்சியில், சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக சொத்து வரி செலுத்திவிடுங்கள், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி பெறலாம், இல்லாவிட்டால், 1% வட்டியுடன் கட்ட வேண்டி வரும் என்று சென்னை மாநகராசி அறிவித்துள்ளது. 

Advertisment

சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்து வரிகள்தான். சென்னை மாநகராட்சியில், சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் சொத்து வரி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயின் மூலம், மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில், வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி என்ற அளவில் ஆண்டுக்கு ரூ. 1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில், குறிப்பிட்ட நாளுக்குள் சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1% தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரையாண்டு தொடங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, சொத்துவரியில் 5% அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சொத்துவரியை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 5,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, சொத்து வரி செலுத்தினால், 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியில், கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இந்த சொத்துவரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டில் வசூலானதைவிட ரூ.227 கோடி அதிகம். நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் விதமாக, நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாதோர் பட்டியல், மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தல் பணிகளுக்கு நடுவே, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளைத்  தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் 20-ம் தேதி வரை ரூ.190 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரியை செலுத்தி 5 சதவீத தள்ளுபடியையும் பெற்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 3லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி செலுத்தி, சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக இருக்கிறார்கள். எனவே, பொதுமக்கள் 5 சதவீத தள்ளுபடியை பெற ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சொத்துவரி செலுத்த விரும்பும் உரிமையாளர்கள்,  சொத்துவரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பி.ஓ.எஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம்.

அல்லது "நம்ம சென்னை", பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள க்யூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment