Chennai Tamil News: சென்னை மாநகராட்சி தனது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச இணைய சேவை வழங்குகிறது.
மேலும், சென்னையின் 15-வது மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் இவ்வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தவிர சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இலவச இணைய சேவை வழங்குகிறார்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிடுகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, "மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
இதனால், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மெரினா கடற்கரையை மேம்படுத்த சென்னை மாநகராட்சி இலவச இணைய சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை ஐந்து இடங்களில் கம்பங்கள் நிறுவப்படவுள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது" என்று கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil