சென்னையில் அபார்ட்மென்ட்டில் வசிக்கிறீர்களா?... உங்களது சொத்து வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரிகளை அணுகி அபாரதத்தினை தவிர்ப்பீர்.
சென்னை அபார்ட்மென்ட் உரிமையாளர்களின் சொத்து வரி, இந்தாண்டு கணிசமாக அதிகரித்துள்ளதை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர், கார்ப்பரேசன் அதிகாரிகளிடம் இதுதொடர்பாக புகார்களை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் உயர் அதிகாரி கூறியதாவது, சொத்து வரி அதிகரிப்பு தொடர்பாக, அதிகளவிலான புகார்கள் வந்துள்ளது உண்மைதான். இந்த வரி விகிதம் அதிகரிப்பிற்கு காரணமாக அவர் கூறியதாவது, கடந்தாண்டில் அபார்ட்மென்ட்களில் குடியிருப்பு இடங்களுக்கு மட்டும் என சொத்து வரி விதிக்கப்பட்டு வந்தது. அபார்ட்மென்ட்களில் குடியிருப்பு பகுதிகள் அல்லாத லிப்ட், வாகன நிறுத்தம், படிக்கட்டுகள் உள்ளிட்டவைகள், வணிகநோக்கு இடங்களாக கணக்கிடப்பட்டுள்ளதால், அதற்கு கமர்சியல் வகையில் அதற்கும் சேர்த்து வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், சொத்து வரி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்ணாநகர்வாசி ஒருவர் கூறியதாவது, கிழக்கு அண்ணா நகர் பகுதியில் 1200 சதுரடியில் ஒரு பிளாட் உள்ளது. இதில் 920 சதுரஅடியில் மட்டும் வசித்துவருகிறோம். மீதமுள்ள 280 சதுரஅடி இடத்தில் லிப்ட், பார்க்கிங், படிக்கட்டுகள் உள்ளன. ஆறு மாதகால அளவில் சொத்துவரியாக ரூ.1,368 கட்டியுள்ளேன். ஆனால், தற்போது ரூ.5,335 சொத்துவரி கட்டுமாறு நோட்டீஸ் வந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
லிப்டு, பார்க்கிங், படிக்கட்டுகளை எல்லாரும் பயன்படுத்திவரும் நிலையில், நான் மட்டும் அதற்கு வரி கட்டுவது ஏற்புடையதாக இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
வரி வசூல் அதிகரிப்பு : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல்பகுதியில் கார்ப்பரேசனுக்கு ரூ.607.38 கோடியும், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ரூ.201.59 கோடி வரியாக கிடைத்துள்ளது. இது கடந்தாண்டின் இதேகாலகட்டத்தில், ரூ.320.21 கோடி மற்றும் ரூ.171.40 கோடிகளாக இருந்ததாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.