/indian-express-tamil/media/media_files/2025/09/27/stalin-home-2025-09-27-08-08-01.jpg)
ஸ்டாலின் இல்லத்தில் 'கட்டிங் எட்ஜ்' தொழில்நுட்பம்... வீட்டை சுற்றி 24/7 செயல்படும் நுண்ணறிவு கண்காணிப்பு!
அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மாநகர காவல்துறை (GCP) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைச் சுற்றி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயங்கும் விரிவான கண்காணிப்பு அமைப்பை வடிவமைத்து நிறுவ ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.
இத்திட்டமானது, உயர்-திறன் சி.சி.டி.வி கேமராக்கள், அச்சுறுத்தல்களைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, நிகழ்நேர நிலவர விழிப்புணர்வையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நடத்தை அல்லது அங்கீகரிக்கப்படாத நுழைவைக் கண்டறிதல், அசைவு கண்டறிதல் (motion detection), முக அடையாளம் காணுதல் (facial recognition), மற்றும் ஊடுருவல் கண்டறிதல் ஆகியவற்றுக்காக வீடியோ பகுப்பாய்வு (video analytics) மென்பொருளை பயன்படுத்துவதற்கு இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது.
அதிகாரபூர்வ ஆவணங்களின்படி, இந்த புதிய பாதுகாப்புத் தீர்வு வளாகத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல் (அ) சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நிகழும்போதே அவற்றைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறுவப்பட்டவுடன் இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடு நந்தனம் சிக்னல், ஜி.கே மூப்பனார் பாலம், செனோடாப் சாலை, கே.பி. தாசன் சாலை, டி.டி.கே சாலை, அண்ணா சாலை, அண்ணா ரவுண்டானா, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள 29 சாலைகள் மற்றும் சந்திப்புகளை உள்ளடக்கும். இதில் 20 தானியங்கி நம்பர் பிளேட் படிக்கும் கேமராக்கள் (ANPR), 20 முக அடையாளம் காணும் கேமராக்கள், 50 ஐந்து MP புல்லட் கேமராக்கள் மற்றும் 10 பான், டில்ட் மற்றும் ஜூம் (Pan, Tilt, Zoom) கேமராக்கள் இடம்பெறும். முக்கிய அம்சமாக, இந்த அமைப்பு கிரேட்டர் சென்னை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் (GCCCC) தடையின்றி ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் அவசர காலங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட, நிகழ்நேர பதில்களை வழங்க முடியும்.
இந்தத் திட்டம் ஏற்கனவே உள்ள GCP-யின் தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நகரம் முழுவதும் உள்ள சிசிடிவி கண்காணிப்பு வலையமைப்பு, ஏ.ஐ-ஆற்றல் பெற்ற முக அடையாளம் காணும் அமைப்புகள் மற்றும் ANPR கேமராக்கள் ஆகியவை ஏற்கனவே அடங்கும். மேலும், இத்துறையானது "காவலன்" அவசரகால மொபைல் செயலி மற்றும் ஜி.பி.எஸ் வசதி கொண்ட ரோந்து வாகனங்கள் போன்ற பொதுமக்களுக்கான டிஜிட்டல் கருவிகளையும் பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.