மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சகம், விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடலுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி மழை நீரை சேமிக்க திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளையே குறிவைத்து தாக்கும் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று விவசாயிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
புதிய திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு
மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் (ஜல் சக்தி துறை) ஹெச்.எம்.பாட்டீல் டெல்லியில் வெளியிட்ட அறிவிப்பில், நிலத்தடி நீர் எடுப்பைக் முறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த ₹1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் எடுக்கப்படுவதாகவும், இதை முறைப்படுத்தும் வகையில் விவசாயிகள் சாகுபடிக்காக எடுக்கும் நீரை அளவீடு செய்து அவர்களுக்குத் தண்டனை வரி விதிக்கப்படும் என்றும், மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான தாக்குதல்
பல்வேறு வழிகளில் மத்திய அரசு கட்டணங்கள் விதிப்பதோடு, தற்போதுள்ள சலுகைகளையும் பறித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலைக் கொடுத்துள்ளது இந்த வரி விதிப்பு. நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால் தான் இந்தியா தேவையில் தன்னிறைவு பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால் அந்நியச் செலாவணி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகி நமது நாட்டுக்குக் கிடைத்து வருகிறது.
தமிழகத்தின் நீர் ஆதாரமும் விவசாயிகள் கவலையும்
தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. தமிழகத்திற்குத் தேவையான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையிலும், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை நிலத்தடி நீர் பயன்பாடாகும். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தால், மோட்டார் உள்ளிட்ட மின் சாதன கருவிகள் பழுதுபட்டு வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். நிலத்தடி நீரை மேம்படுத்தி சேமிக்க வேண்டும் என்ற அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. ஏனெனில் அந்த நீரை நம்பித்தான் விவசாயிகள் உள்ளனர் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
நிலத்தடி நீரைச் சேமிக்கும் அக்கறை அரசுக்கு உண்மையாகவே இருந்தால், இருக்கும் நீர் நிலைகளைத் தூர்வாரி, மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, கடலுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்கி திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளையே குறிவைத்து தாக்கும் செயலே ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இலவச மின்சாரத்திற்கு அச்சுறுத்தல்
நீண்ட நெடிய போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற விவசாயிகளின் தியாகங்களுக்குப் பின்னர்தான் தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பு, இலவச மின்சாரத்தையும் துண்டிக்கும் ஒன்றிய அரசின் முன்னேற்பாடாகவே தெரிகிறது.
கோரிக்கை
ஆகவே, மத்திய அரசு உடனடியாக இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இதைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை மாவட்ட விவசாயிகள் சார்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் எங்கள் கோரிக்கையை முன்வைப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.