தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன,
அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், தட்டச்சர், என 8 வகை பதவிகளில் காலி இடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப குரூப் 4 தேர்வு மாநிலம முழுவதும் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 6,962 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நாளை (11.2.18) நடைபெறுகிறது. தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பங்களிப்புடன் தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேர்வு மைய பகுதிகளுக்கு, காலை, 8:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கவும் போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுபாடுகள்:
*செல்போன், கால்குலேட்டர், நினைவக குறிப்பு, புத்தகங்கள், பதிவு செய்யும் உபகரணங்கள் போன்ற எந்த சாதனங்களுக்கு தேர்வு அறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
*தேவை ஏற்பட்டால் தேர்வு எழுதுபவர்கள் முழுமையான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கைக்கெடிகாரம், மோதிரம், நகைகள் அணியக்கூடாது.
*தேர்வு முறையில் மேம்பாடாக, பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகியவை, விடைத்தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதனால், தவறாக பதிவெண் குறிப்பிட்டால், மதிப்பெண் குறைக்கும் தண்டனை, ரத்து செய்யப்பட்டுள்ளது.
*வினாக்களின் கட்டங்களை கணக்கிட்டு எழுத, புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
*.வினாத்தாளில், விடைகளை குறிப்பது தடை செய்யப்பட்டுள்ளது
தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.